“இன, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் காவியுடையில் எவரும் வெறியாட்டம் போடக்கூடாது. நீதிமன்றத்தை அவமதித்து சிறைக்குள் இருந்தவர்கள் மீண்டும் வெளியில் வந்து சண்டித்தனம் காட்டுகின்றார்கள். இது நாட்டுக்குத்தான் அவமானம்.”இவ்வாறு அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடல் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினரால் தகனம் செய்யப்பட்டது.
இதனால் அங்கு இன்று பெரும் பதற்றம் நிலவியது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த நாடு அனைத்து இனத்தவர்களுக்கும் - சகல மதத்தவர்களுக்கும் சொந்தமான நாடு. இதில் நான் பெரிது - நீ சிறிது என்ற பாகுபாடு வேண்டாம். நாட்டின் நீதித்துறைக்கு அனைவரும் தலைவணங்கியே ஆக வேண்டும்.
நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி நீராவியடியில் பிக்குகள் நடந்துகொண்ட விதம் அருவருக்கத்தக்கது. இது இறந்த விகாராதிபதியை அவமதிக்கும் செயலாகும்” என்றார்.
இதேவேளை, இந்த விவகாரம் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்து தெரிவிக்கையில்,
இறந்த விகாராதிபதியின் உடலை வைத்து பௌத்த பிக்குகள் சிலர் வடக்கில் அரசியல் நாடகம் நடத்தியுள்ளார்கள். நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறிய இவர்களின் அடாவடியால் நாம் வெட்கித் தலைகுனிகின்றோம்.”
“நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் ஒரு தரப்பினர் பௌத்த பிக்குகள் சிலரை தமது அரசியலுக்கு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றார்கள். இந்த அரசியல் நாடகம்தான் முல்லைத்தீவு - நீராவியடியில் அரங்கேற்றப்பட்டுள்ளது.
இறந்த விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்வதற்குப் பொருத்தமான இடத்தை நீதிமன்றம் வழங்கியிருந்தது. ஆனால், அதனை மீறி - நீதிமன்றத்தை அவமதித்து தாம் நினைத்த மாதிரி பௌத்த பிக்குகள் சிலர் செயற்பட்டுள்ளார்கள்.
கொழும்பிலிருந்து சென்ற பிக்குகள் தலைமையிலான குழுவினர் சர்ச்சைக்குரிய இடத்தில் - இன, மத நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படும் இடத்தில் விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்துள்ளார்கள்.
இந்த அடாவடியில் ஈடுபட்ட பிக்குகளை ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் ஒரு தரப்பினர் இயக்குகின்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திட்டமிட்ட வகையில் இன, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் இந்த அரசியல் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதனை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்” - என்றார்.