web log free
November 27, 2024

சர்ச்சை குறித்து விசாரணைக்கு பணிப்பு

சொலிசிட்டர் ஜெனரல் தில்ருக்‌ஷி டயஸ் விக்கிரமசிங்க எவன் கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியுடன் இரகசியமாக முன்னெடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பில் பூர்வாங்க விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா பொதுச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சட்ட மாஅதிபர் இச்சம்பவம் தொடர்பில் பூர்வாங்க விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கூறி பொதுச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பு அதிகாரியான நிஷாரா ஜயரட்ன ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இதேவேளை தில்ருக்‌ஷி டயஸ் விக்கிரமசிங்கவுக்கு சொலிசிட்டர் ஜெனரல் என்ற ரீதியில் எவ்வித பணிகளையும் வழங்குவதில்லையென்றும் சட்டமா அதிபர் புதிய சுற்றுநிருபத்துக்கூடாக தீர்மானத்துக்கு வந்திருப்பதாகவும் சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

மேலும் சொலிசிட்டர் ஜெனரல் பதவியில் தற்காலிகமாக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டரான சஞ்ஜெய் ராஜரட்னத்தை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

முன்னாள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சொலிசிட்டர் ஜெனரல் தில்ருக்‌ஷி டயஸ் விக்கிரமசிங்கவுக்கும் எவன் கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதிக்குமிடையில் இடம்பெற்றதாக நம்பப்படும் தொலைபேசி உரையாடல் சமூக வலைத்தளங்களில் பரவலாகியுள்ளது.

எனினும் சொலிசிட்டர் ஜெனரல் தில்ருக்‌ஷி டயஸ், நிஸ்ஸங்க சேனாதிபதியுடனான உரையாடல் மாற்றியமைக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதேநேரம் மாற்றியமைக்கப்படாத தொலைபெசி உரையாடலை வெளியிடுமாறும் அவர் நிஸ்ஸங்க சேனாதிபதியை கேட்டுக் கொண்டுள்ளார். 

Last modified on Tuesday, 24 September 2019 03:24
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd