ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, கட்சியின் உப-தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ, ஏகமனதாக நியமிக்கப்பட்டார்.
இலங்கையின், இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மற்றும் ஹேமா பிரேமதாஸவின் மகனான இவர், 1967 ஜனவரி 12ஆம் திகதியன்று பிறந்தார். கல்கிஸை சென்.தோமஸ் வித்தியாலயம் மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியில் ஆரம்பக்கல்வியை பயின்றார்.
இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உயர்க்கல்வியை தொடர்ந்தார். இங்கிலாந்தில், அரசியல் விஞ்ஞானம் பொருளாதார விஞ்ஞானம் ஆகிய துறைகளில் பயின்றார்.
லண்டன் அகாடமி ஆஃப் சயின்சஸில் பயின்றார். பம்பலப்பிட்டிய வஜிராராம தாம் பாடசாலைகளில் அறநெறிக்கல்வியைத் தொடர்ந்தார். கிராமப்புற ஏழை அப்பாவி மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து 1993 ஆம் ஆண்டு அரசியலுக்குள் பிரவேசித்தார்.
எதிர்பார்க்காத நேரத்தில் புலிகளின் தற்கொலைத் தாக்குதலினால் தந்தை ரணசிங்க பிரேமதாஸவை இழந்தார்.
அதன்பின்னர், தன்னுடைய தாய் ஹேமா பிரேமதாஸ, ஒரேயொரு சகோதரியான துலாஞ்சலி பிரேமதாஸ ஆகியோருடன் இணைந்து அரசியல் வாழ்க்கையை முன்னகர்த்தி வந்தார்.
1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு, முதலாவது நபராக தெரிவுசெய்யப்பட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். அன்றிலிருந்து தோல்வியடையாத அரசியல்வாதியாக தேர்தல்களில் போட்டியிட்டு, ஆகக்கூடுதலான சதவீதத்தில் எம்.பியாக தெரிவு செய்யப்படுகின்றமை விசேட அம்சமாகும்.
2002-2004 ஆம் ஆண்டுகளில் சுகாதார பிரதியமைச்சராக கடமையாற்றிய அவர், அரசாங்கம் கவிழ்ந்ததன் பின்னர், எதிர்க்கட்சியில் அமர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்துகொண்டே, மக்களுக்கு சேவையாற்றினார்.
ஜலதியை திருமணம் முடித்த அவர், அவருடைய அரசியல் வாழ்க்ககையை எதிர்க்கட்சியிலிருந்து கொண்டே முன்னெடுத்தார். ‘சசுனட்ட அருண’ எனும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்த அவர், விஹாரைகளை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தில், வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர், வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்தார். சமுர்த்தி பயனாளிகளுக்கு நிவாரண முறைமையில், 1இலட்சம் ரூபாய் கொடுத்து வீடுகளை கட்டுவதற்கு இலகு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதனை நடைமுறைப்படுத்தி வருகின்றார்.
சஜித் பிரேமதாஸவின் செவன வீடமைப்பு கிராம திட்டத்தினால் 182 கிராமங்கள் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இன்னும் 1926 கிராமங்கள் நிர்மாணிக்கப்பட்டுவருகின்றன. ஏழை கிராமங்கள், நடுத்தர வர்க்க கிராமங்கள், பொது சேவை கிராமங்கள், போர்வீரர்கள் மற்றும் போலீஸ் கிராமங்கள் என நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.