web log free
May 09, 2025

கூட்டா, தனிவழியா? திங்கள் தீர்மானம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்ப்பில் வேட்பாளரை நிறுத்தி தனிவழியில் செல்வதா? அல்லது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு ஒன்றிணைந்து செயற்படுவதா? என்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட்கிழமை தீர்மானிக்கவுள்ளது.

அந்த தீர்மானத்தை எடுப்பதற்காக, கட்சியின் மத்தியக் குழு, கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், அன்றுமாலை கூடவுள்ளது.

எப்படியாக இருந்தாலும், தனி வழியில் செல்வதற்கான ஆதரவு அதிகரித்துள்ளது என அறியமுடிகின்றது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டுசேர்ந்து பயணிப்பதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை,  சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க எம்.பி.,

ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவதா அல்லது தனியாக போட்டியிடுவதா என்பது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் கட்சி மத்திய குழு கூட்டத்தில் தீர்க்கமான முடிவு எட்டப்படவுள்ளது. தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ​போட்டியிடாவிட்டால் யாரை களமிறக்குவது என இதுவரை முடிவு செய்யப்படவில்லை. அடுத்த வாரத்தில் முக்கிய பலசுற்று பேச்சுக்கள் கட்சிக்குள் நடைபெறும் எனவும் குறிப்பிட்டார். 

பொது ஜன பெரமுனவுடன் எந்த அடிப்படையில் சு.க இணைய வேண்டும் என்பது தொடர்பில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. மொட்டு சின்னத்திற்கு பதிலாக பொதுச் சின்னமொன்றில் போட்டியவேண்டும் என்றே எமது அமைப்பாளர்கள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கோரி வருகின்றனர். சின்னத்தை மாற்றாமல் இருவரும் இணைந்து பயணம் செய்ய முடியாது.

Last modified on Friday, 27 September 2019 03:18
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd