ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்படவிருந்த பெரும் பிளவை, இரண்டு பெண்களே தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஆரம்பத்தில் எவ்விதமான அக்கறையும் காட்டாமல் இருந்த அப்பெண்கள் இருவரும், இறுதியில் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பது தொடர்பில், கடந்த காலங்களில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதன் பின்னர், அது இன்னுமின்னும் சூடுபிடித்திருந்தது.
நானா, நீயா அல்லது அவரா என்ற வாக்குவாதங்களுக்குள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் சிக்கித்தவித்தனர்.
ஒரு கட்டத்தில் பல சுற்றுப்பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இவையெல்லாம் ஊடகங்களுக்கு தீணிப்போட்டன.
எதிர்க்கட்சிகளும் அதனை ஒரு பிரசார பணிகளுக்காக பயன்படுத்திகொண்டன.
தங்களுடைய பிரசாரத்தை முன்னெடுப்பதற்கு பதிலாக, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இடம்பெற்ற உட்கட்சி பூசல்களுக்கு பெருமெடுப்பில் முக்கியத்துவம் கொடுத்தனர்.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில், கடுமையான குடும்பிச்சண்டை இடம்பெற்றது.
ஒரு கட்டத்தில் பிரிந்துசென்று தனித்து போட்டியிடும் நடவடிக்கைகளை சஜித் பிரேமதாஸவுக்கு சார்பானவர்கள் எடுத்திருந்தனர் என அறியமுடிகின்றது.
எனினும், அதனை வெளிப்படையாக காட்டிக்கொள்ளவே இல்லை.
சஜித் பிரிந்துசென்றால், ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபடும். அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதற்கு, எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்திருந்தன.
அதாவது, சஜித்தும் கருவும் அல்லது சஜித்தும் ஐ.தே.கவில் மற்றுமொருவரும் போட்டியிட்டால், ஐ.தே.கவின் வாக்குவங்கி பிரியுமென எதிரணியினர் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையிலேயே, சஜித்துக்கு பக்கபலமாக இருந்த பெண்ணும், ரணிலுக்கு ஆதரவளித்த பெண்மணியும், ஐ.தே.கவில் ஏற்படவிருந்த பிளவை தடுத்துநிறுத்தியுள்ளனர் என அறியமுடிகின்றது.
தன்னுடைய மகனான சஜித் பிரேமதாஸவுக்கு அறிவுரை வழங்கிய அவருடைய தாயார் ஹேமா பிரேமதாஸ, கட்சியை விட்டு செல்லக்கூடாதென அறிவுறுத்தியுள்ளார்.
தன்னுடைய மகன் அப்படி செய்யமாட்டார் என, பிரதமர் ரணில் விக்கிமசிங்கவுக்கு ஹேமா பிரேமதாஸ உறுதியளித்துள்ளார்.
அதேபோல, தன்னுடைய மனைவியான ஜலதி, சஜித் பிரேமதாஸவுக்கு பக்கபலமாக இருந்துள்ளார்.
இவ்விரு பெண்களின் முயற்சியினால், ரணிலுக்கும் ஏனைய அமைச்சர்களுக்கும் சஜித்துக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுடனும், சஜித் பிரேமதாஸவின் மனைவி, புரிந்துணர்வுடன் செயற்பட்டு விபரங்களை எடுத்துரைத்துள்ளார்.
இதனால், ஐ.தே.கவுக்குள் ஏற்படவிருந்த பெரும் பிளவு தவிர்க்கப்பட்டது.
அதற்கு மேலே குறிப்பிட்ட இரண்டு பெண்களுமே காரணமாக இருந்துள்ளனர் என அறியமுடிகின்றது.