மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட நசார் மொஹமட் ஆசாத்தின் உடற்பாகங்கள் இன்று வெள்ளிக்கிழமை (27) புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப்பள்ளிவாயல் மையவாடியில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் புதைக்கப்பட்டன..
குறித்த தற்கொலை குண்டுதாரியின் தலை மற்றும் உடற்பாகங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது இந்த உடற்பாகங்களை அரச செலவில் புதைக்குமாறு அரசாங்க அதிபருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் கட்டளையிட்டது.
இதனையடுத்து இதனை மட்டக்களப்பு புதூர் ஆலையடிச்சோலை மயானத்தில் புதைப்பதற்கு முயற்சித்தபோது அங்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனையடுத்து பல்வேறு இடங்களில் புதைக்கப்படவுள்ளதாக அந்தந்த பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் சில உள்ளுராட்சி மன்றங்கள் மாநகர சபைகள் இதனை தமது பிரதேசத்தில் புதைப்பதற்கு எதிராக தீர்மானங்களையும் எடுத்திருந்தனர்.
இந்த நிலையில் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் கடந்த மாதம் 26ஆம் திகதி இரவேடு இரவாக இந்த உடற்பாகங்கள் புதைக்கப்பட்டது.
இதனையடுத்து பொதுமக்கள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் அரசியல்வாதிகள் இதற்கு எதிராக வீதியில் இறங்கி போராடியதுடன் கல்லடி பாலத்தில் வீதியைமறித்து போராட்டம் நடத்தினர்.
கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட உடற்பாகங்களை நீதிமன்ற உத்தரவுக்கமைய மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்ட நிலையில் நேற்று வியாழக்கிழமைக்கு முன்னர் இதனை பொருத்தமான இடத்தில் அரசாங்க அதிபர் ஊடாக புதைக்குமாறு நீதவான் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கட்டளையிட்டார்.
இதற்கமைய குறித்த உடற்பாகங்களை இன்று வெள்ளிக்கிழமை (27) புதிய காத்தான்குடி 3ம் குறிச்சியிலுள்ள பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் புதைப்பதற்கு தீர்மானிக்கப்டதையடுத்து வைத்தியசாலை பிரேத அறையில் இருந்த உடற்பாகங்களை காத்தான்குடி பிரதேச செயலாளர் மற்றும் கிராம உத்தியோகத்தர் பொறுப்பேற்று பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்புடன் குறித்த மையவாடியில் புதைக்கப்பட்டது
இதனை புதைக்கும் போது இஸ்லாமிய மார்க்க கடமைகள் எதுவும் இடம் பெறவில்லை. இதன் போது பெருமளவிளான பொலிஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.