போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணங்கள் அனைத்தும் காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - முள்ளியாவளை பகுதியில் இன்று இடம்பெற்ற தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரத்தை பிரகடனப்படுத்தும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கைதிகள் இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு, தண்டனையை நிறைவேற்ற தான் கடந்த காலங்களில் முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாக கூறியுள்ள ஜனாதிபதி, அந்த முயற்சிகள் சற்று காலதாமதமாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நீதி அமைச்சு மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் ஆகியவற்றில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த சட்டவிரோத போதைப்பொருள் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளினதும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணங்கள், அனைத்தும் காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எனினும், போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரஜையொருவரின் ஆவணம் மாத்திரமே காணப்படுவதாகவும், தான் அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத போதைப்பொருள் குற்றங்களினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நீதிமன்ற ஆவணம் மாத்திரமே காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகர்களினால் இந்த ஆவணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
எனினும், இவ்வாறு காணாமல் போன ஆவணங்களை எவ்வாறேனும் கண்டுபிடித்து, போதைப்பொருள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கான தண்டனையை தான் நிறைவேற்ற பின்வாங்க போவதில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.