web log free
April 27, 2024

யானைகளை பலிபூஜை செய்திருப்பதாக தகவல்

ஹபரண, ஹிரிவடுன்ன, தும்பிகுளம வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்த 7 யானைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அது குறித்து முக்கிய தகவல்கள் பல வெளியாகிவருகின்றன. 

இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை குறைவடைந்து வரும் நிலையில், 27 ஆம் திகதி இறந்த நான்கு யானைகளின் சடலங்கள் மீட்கப்பட்டதோடு,  ஆம் திகதி மேலும் 3 யானைகளின் சடலங்கள்  மீட்கப்பட்டுள்ளன. அதற்கமைய, கடந்த இரு நாட்களில் குறித்த பகுதியில் ஏழு யானைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இறந்த யானைகளில் மூன்று கர்ப்பிணி யானைகளும் காணப்படுவதாக வனஜீவராசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த யானைகளின் இறப்புக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், ஏதேனும் மனித செயற்பாடுகள் காரணமாக இருக்கலாம் என, வனஜீவராசிகள் திணைக்கள மிருக வைத்தியர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சிகிரியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள், இராணுவம், ஹபரண பொலிஸார் ஆகியோர் பிரதேசவாசிகளுடன் இணைந்து, மேலும் யானைகளின் சடலங்கள் உள்ளதா என தேடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, பெண் யானையொன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு, வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் அலுவிஹாரே விஜயம் செய்திருந்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொலன்னறுவை வனஜீவராசிகள் வலயத்தின் உதவி பணிப்பாளர் W.D.M.J. விக்ரமசிங்க, இந்தச் செயலைச் எவரேனுமொருவர் செய்திருந்தால், அவர்களுக்கெதிராக உச்சபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

கண்டுபிடிக்கப்பட்ட இறந்த யானை ஒன்றின் சடலத்தை பிரேத பரிசோதனை மேற்கொண்டிருந்த வேளையில், ​​அதன் குட்டியொன்று அந்த பகுதியில் சுற்றிக் கொண்டிருந்துள்ளது. இதனையடுத்து, அதற்கு மயக்க மருந்து வழங்கி வேறொரு பிரதேசத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த யானைகளின் மர்மமான மரணத்திற்கான காரணத்தை அறிய, கிரித்தலை, அநுராதபுரம், வட மேல் வலயங்களுக்கு பொறுப்பான 3 கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட 4 வனவிலங்கு குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றன.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலி்ல் போட்டியிடும் ஒருவர், தனது வெற்றிக்காக, யானைகளை பலிபூஜை செய்திருக்கலாம் என சமூக ஊடகங்களில் பரவலாக கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யானைகளை பலிபூஜை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றமை இதுவே முதன்முறையாகும். 

Last modified on Monday, 30 September 2019 02:24