ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், அந்த பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் பேச்சாளர்களில் ஒருவருமான பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல, ஐக்கிய தேசியக் ்கட்சியில் இணைந்துகொள்ளவுள்ளார் என அறியமுடிகின்றது.
அமெரிக்காவுடன் செய்துகொள்ளவிருக்கும் இரண்டு ஒப்பந்தங்கள் தொடர்பில், பெரமுனவில் அங்கம் வகிக்கும் பங்காளிகளுக்கு இடையில், இருவேறு கருத்துமுரண்பாடுகள் நிலவுகின்றமையால், கெஹலிய மேற்கண்ட முடிவை எடுத்துள்ளார் என அறியமுடிகின்றது.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தால், அடுத்த பொதுத் தேர்தலில் தன்னுடைய வாக்குவங்கியில் சரிவு ஏற்படுமென்ற அச்சத்தினால், ஐ.தே.கவில் இணைவதற்கு கெஹலிய ரம்புக்வெல தீர்மானித்துள்ளார் என அறியமுடிந்துள்ளது.
எக்ஸா மற்றும் மிலேனியம் சிட்டி ஆகிய ஒப்பந்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்தலாமென கெஹலிய ரம்புக்வெல அண்மையில் கருத்துரைத்திருந்தார்.
எனினும், அவ்வாறு சிந்திப்பதே தவறாகும். அந்த ஒப்பந்தங்கள் தொடர்பில், அறியாதவர்களே அவ்வாறு கூறுகின்றனர் என, விமல் வீரவன்ச தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
எது எவ்வாறாக இருப்பினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வாக்கு வங்கி, பலமானதாக உள்ளதெனத் தெரிவித்த கெஹலிய ரம்புக்வல, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவது சாத்தியமற்றதென தெரிவித்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது.