ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு பிரசார பணிகளை முன்னெடுப்பது என்பது தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சி வியூகங்களை வகுத்து வருகின்றது.
அதன் ஒரு அங்கமாக, கட்சியின் அமைப்பாளர்களை கொழும்பு இன்று (30) அழைத்து, சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளது.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இந்த சந்திப்பு, கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும்.
அதில், ஐக்கிய தேசியக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் பங்கேற்பார்.
இந்நிலையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, நீதிமன்றத்தை நாடுவதற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் என அறியமுடிகின்றது.
இரட்டை குடியுரிமை விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு, இரண்டு தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்தார் எனக் குற்றம்சுமத்தி, உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கு ஐ.தே.க தயாராகி விருவதாகவும் அறியமுடிகின்றது.
இரண்டு தேசிய அடையாள அட்டைகளை வைத்திருக்கும் நபரொருவரினால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமுடியாது என்பதே, ஐக்கிய தேசியக் கட்சியின் வாதமாக உள்ளது.
அதற்காக உயர்நீதிமன்றத்தை நாடி, இடைக்கால தடையுத்தரவைப் பெற்றுக்கொள்வதற்கும் ஐ.தே.க முயற்சிக்கின்றது என தகவல்கள் கிடைத்துள்ளன.
அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமாயின், இன்றையதினம் அதற்கான இடைக்கால தடையுத்தரவை, ஐ.தே.க பெற்றுக்கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகின்றது.