-ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவினால், கொழும்பு அரசியலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று, கடந்த வௌ்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுமீதான விசாரணைகளை எதிர்வரும் 2, 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளன.
கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்கக் கூடாது என உத்தரவிடுமாறு கோரிக்கையும் மனுமீதான விசாரணைகளை நிறைவடையும் வரையிலும் இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறே, அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
அதாவது, மனுமீதான விசாரணைகளை நிறைவடையும் வரையிலும், கோத்தாபய ராஜபக்ஷ, தற்போது பயன்படுத்தும், தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு இடைக்கால தடையுத்தரவு கோரப்பட்டது.
காமினி வியாங்கொட மற்றும் சந்திரகுப்த தேனுவர ஆகியோரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனு, கடந்த வௌ்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மனுமீதான விசாரணைக்கு திகதிகளை குறித்தது.
அந்த மனுவில், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர், ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர், உள்நாட்டலுவல்கள் அமைச்சர், அமைச்சின் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பதில் பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்ததாகக் கூறி, முறையான குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்காமல், இலங்கை கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுள்ளதாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த மனுவுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்படுமாயின், கோத்தாபய ராஜபக்ஷவினால் தேர்தலில் போட்டியிடமுடியாது.
ஆகையால், எதிர்க்கட்சியின் சார்பில் மற்றுமொரு வேட்பாளரை நிறுத்தவேண்டும். அதுதொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினர் ஆராய்ந்துவருகின்றனர் என அறியமுடிகின்றது.