சட்டத்தரணியின் வாதத்தால், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, பிரசார பணிகளை முன்னெடுக்க முடியாத நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது, கோத்தாபய ராஜபக்ஷ பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித், குகன் ஆகியோர் 2011 ஆம் ஆண்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கில், செப்டெம்பர் 27ஆம் திகதி ஆஜராகுமாறு, அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், அன்றையதினம் ஆஜராகமுடியாது என கோத்தாவின் சட்டத்தரணி, நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை செப்டெம்பர் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டிருந்தது.
மனுவை ஆராய்ந்திருந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், வடக்கு, கிழக்கிலுள்ள நீதிமன்றங்களை தவிர, நாட்டிலுள்ள எந்தவொரு நீதிமன்றத்திலும், ஆஜராகி சாட்சியமளிக்கும் வகையில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு கட்டளைப் பிறப்பித்துள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட லலித், குகன் ஆகிய இருவரின் உறவினர்களினால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பில், கோத்தாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்ததன் பின்னரே, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தீபாலி விஜேசுந்தர மேற்கண்டவாறு இடைக்கால தடையை விதித்து, கட்டளையைப் பிறப்பித்தார்.
கோத்தாவின் மனுவை, நீதியரசர்களான தீபாலி விஜேசுந்தர மற்றும் அசல வேங்கப்புலி ஆகியோரே இன்று (24) ஆராயவிருந்தனர். எனினும், நீதியசர் அசல வேங்கப்புலி மனுவை ஆராய்வதிலிருந்து விலகிச்சென்றார்.
கோத்தாவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, நீதியரசர் தீபாலி விஜயசுந்தர, அம்மனுவை ஆராய்ந்தார். மனு ஆராயப்பட்டபோது, சட்டமா அதிபரின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட சட்டத்தரணி வசந்த பெரேரா, “கோத்தாவின் கோரிக்கை தொடர்பில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை” என்றார். அதன்பின்னரே மேற்கண்ட இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த மனுமீதான விசாரணைகள் நிறைவடையும் வரையிலும் இந்த இடைக்கால தடையுத்தரவு அமுலில் இருக்குமென கட்டளையிடப்பட்டது.
இதனால், ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கோத்தாபயவுக்கு வடக்கு, கிழக்கில் சென்று பிரசார பணிகளை முன்னெடுக்கமுடியாது.
அவ்வாறு முன்னெடுக்கும் போது, அங்குள்ள நீதிமன்றமொன்றில், அவர் கட்டாயமாக ஆஜராகவேண்டிய நிலைமை ஏற்படுமென அறியமுடிகின்றது.