கட்டாய விடுமுறையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று (01) கைதுசெய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவர், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, பிணையில் விடுதலைச் செய்யப்பட்டார். 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், பொலிஸ் தலைமையகத்தில் இருக்கும் மின்னுயர்த்தியில் பணியாற்றிய தன்னை, தூஷனத்தால் ஏசி, தாக்குதல் நடத்துவதற்கு முயன்றார் என்றக் குற்றச்சாட்டி, அங்கு கடமையிலிருந்த சமரகோன் பண்டார என்பவர் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமையவே, பூஜித்த ஜயசுந்தர கைதுசெய்யப்பட்டார்.
சமரகோனினால், பல முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் எவையும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவில்லை. எனினும், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின்னர், பூஜித்த ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பிவைக்கப்பட்டார்.
அதனையடுத்தே, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. பூஜித்த ஜயசுந்தர, பொலிஸ் மா அதிபராக பதவியேற்றதன் பின்னர், பொலிஸ் தலைமையகம் உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களில், காலை வேளையில், “தியானம்” செய்யவேண்டுமென்ற திட்டத்தை ஆரம்பித்தார்.
அந்த தியானத்தில் பங்கேற்காமல், மின்னுயர்த்தி இயக்கும் பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த போதே, பூஜித்த ஜயசுந்தர இவ்வாறு நடந்துகொண்டார் என குற்றம் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.