web log free
May 07, 2024

கோத்தாவுக்கான இடைக்கால தடை நீடிப்பு

 கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை தற்காலிகமாக இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஸ அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்கு அரசாங்கத்துக்கு சொந்தமான மூன்று கோடியே 39 இலட்சம் ரூபாய் பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டி, அந்த ஏழுபேருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கோத்தாபய ராஜபக்ஷவினால், தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மேன்முறையீட்டு மனு, தெஹிதெனிய, துறைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது , இடைக்காலத் தடை உத்தரவை நீடிப்பதற்கு நீதியரசர்கள் குழாமின் பெரும்பான்மையுடன் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய, கோட்டாபய ராஜபக்ஸவின் மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 11 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவும் நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஸ அருங்காட்சியக நிர்மாணம் தொடர்பான வழக்கை விசாரணை செய்யும் அதிகாரம் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்திற்கு இல்லை என கோட்டாபய ராஜபக்ஸவின் சட்டத்தரணிகளால் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

எனினும், இந்த விடயத்தை மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் நிராகரித்தமையால், இந்த உத்தரவை மறு பரிசீலனைக்கு உட்படுத்துமாறு கோரி கோட்டாபய ராஜபக்ஸ தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.

இந்த இரண்டு நீதிமன்றங்களினாலும் வழங்கப்பட்ட உத்தரவுகளை ஆட்சேபனைக்கு உட்படுத்தி கோட்டாபய ராஜபக்ஸவின் சட்டத்தரணிகளால் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Last modified on Wednesday, 02 October 2019 01:22