எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷவின் திருமண வைபவம் காலிமுகத்திடல் ஹோட்டலில் இன்றுக்காலை 9.30க்கு இடம்பெறவுள்ளது.
குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றிருந்த நிலையில், யோசித்த ராஜபக்ஷ, நதீஷா ஜயசேகரவை கடந்த ஜூலை மாதம் பதிவு திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்தின் பின்னர், எதிர்வரும் 7ஆம் திகதியன்று, வீரக்கெட்டிய மெதமுலன வீட்டுக்கு மறுவீடு செல்வர். அதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டு வைபவங்களுக்கும் மஹிந்த ராஜபக்ஷவின் மிகநெருங்கிய உறவினர்கள், அரசியல்வாதிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடற்படையின் லெப்டினனட் யோஷித, சேவையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்தார். பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், யோஷித்த ராஜபக்ஷ, கடற்படையில் மீண்டும் இணைத்துகொள்ளப்பட்டார்.
கடற்படையின் லெப்டினனட் யோஷித ராஜபக்ஷ, தற்காலிகமாக லெப்டினனட் கொமாண்டராக பதிவியுர்த்தப்பட்டு கடற்படை தலைமையகத்துக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
திருமண வைபவத்தின் போது, கடற்படையின் “பண்பாட்டு முறையை” பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே, கடற்படையில் அவர், மீளவும் இணைத்துகொள்ளப்பட்டார் என அறியமுடிகின்றது.
பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன், கடற்படையின் கட்டளைகளுக்கு அமைவாகவே, இந்த “பண்பாட்டு முறை” நடத்தப்படவுள்ளது என அறியமுடிகின்றது.
அவருடன் பணிபுரிந்தவர்கள் லெப்டினனட் கொமாண்டர்களாக நிரந்தரமாக பதவியுயர்த்தப்பட்டுள்ள நிலையில், யோஷித ராஜபக்ஷ தற்காலிகமாக லெப்டினனட் கொமாண்டராக பதிவியுர்த்தப்பட்டுள்ளார்.
குறித்த பதவிக்கு தேவையான அடிப்படை தகுதிகளை நிறைவுசெய்த பின்னர், நிலையான லெப்டினனட் கொமாண்டராக அவர், எதிர்காலத்தில் பதவியுயர்த்தப்படுவார் என்று கடற்படை ஊடகப்பேச்சாளர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.