பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாப ராஜபக்ஷவின் இலங்கை குடியுரிமை தொடர்பிலான வழக்குவிசாரணையின் இறுதிநாள் இன்றாகும்.
இதனையொட்டி, உயர்நீதிமன்றத்தின் வளாகத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மனுக்கள் மீதான இரண்டாம் நாள் விசாரணை நேற்று (03) இடம்பெற்றது.
இதில், ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரம் தொடர்பில் இருவேறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெறும் இந்த வழக்கில், கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்ள முடியாது என உத்தரவிடுமாறும் கோரப்பட்டே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வழக்கு விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான யசந்த கோத்தாகொட, மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர குழாம் முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
வழக்கு விசாரணை நேற்று ஆரம்பிக்கப்பட்ட போது, மனுவின் மூன்றாவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள அரச பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜித அபேவர்தன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சானக்க டி சில்வா ஆஜராகி இருந்தார்.
அவர், தனது வாதத்தில், நிறைவேற்று அதிகாரம், அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் அரச நிர்வாகத்துக்கான அதிகாரம், அமைச்சரவைக்கே உள்ளது.
அமைச்சரவையில் ஜனாதிபதி அரச பிரதானி மட்மேயாவார் என்றார்.
அதனடிப்படையில், அரச நிர்வாகம் அமைச்சரவையினால் நிர்வகிக்கப்படுகின்றது. அந்தந்த அமைச்சுகளுக்கான விடயதானங்கள் குறித்தொகுக்கப்பட்ட அமைச்சரினால் நிறைவேற்றப்படவேண்டும். அதுவே, அரசமைப்பின் தேவையாகும்.
ஏதாவதொரு அமைச்சரின் அல்லது அமைச்சு தொடர்பிலான காரணங்கள் நிறைவேற்றுவதற்கு, ஜனாதிபதிக்கு சட்டரீதியில் எவ்விதமான அதிகாரமும் இல்லை என்றார்.
கோத்தாவின் சட்டத்தரணி முன்வைத்த வாதம்
கோத்தாபய ராஜபக்ஷவின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா,
“அரசியலமைப்பின் பிரகாரம் நிறைவேற்றுக்கு அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது” என்றார்.
ஜனாதிபதி, மக்களின் வாக்குகளினால் நேரடியாக தெரிவு செய்யப்படுபவர் ஆவார்.
அதனடிப்படையில், ஜனாதிபதிக்கு மக்களினால் பொறுப்பளிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றார்.
ஒவ்வொரு அமைச்சுக்கும் அமைச்சர்களை நியமிக்கும் நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளது.
ஏதாவது அமைச்சுகளுக்கு அமைச்சர்களை நியமிக்கவில்லை எனில், அந்த அமைச்சுக்களின் அதிகாரங்கள் ஜனாதிபதி வசமே உள்ளது.
கோத்தாபயவுக்கு இட்டை பிரஜாவுரிமை வழக்கப்பட்ட போது, பிரஜாவுரிமையை வழங்குவதற்கான அதிகாரம் பாதுகாப்பு அமைச்சின் கீழே இருந்தது.
பாதுகாப்பு அமைச்சின் அதிகாரம், ஜனாதிபதியிடமே உள்ளது என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா, மேலும் கருத்துரைத்தார்.
இது உண்மையான காரணங்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அல்லவெனத் தெரிவித்த சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா, அந்த மனுக்களை நிராகரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
வழக்கு விசாரணைகள் இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று (04) தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.