முஸ்லிம் பெண்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 10 இளைஞர்களையும், எதிர்வரும் 9ஆம் திகதி வரையிலும் விளக்கமறியல் வைக்குமாறு, பாணந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் சந்தன கலன்சூரிய உத்தரவிட்டுள்ளார்.
பண்டாரகம, அட்டலுகம பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்கள் இருவர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அவர்கள், பொலிஸாரின் கண்களுக்கு மண்ணை தூவி தலைமறைவாகவிருந்த போதிலும், மேல்மாகாண தெற்கு குற்றப்பிரிவினாரால் ஒக்டோபர் 1 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.
சிங்கள இனத்தைச் சேர்ந்த இளைஞனை திருமணம் முடித்துவிட்டார் என்றக் குற்றச்சாட்டிலேயே அந்தப் பெண்ணின் மீதும், அவரது தயார் மீதும் மேற்படி குழுவினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
அந்த பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த மேற்படி சந்தேகநபர்கள், அந்த பெண்கள் இருவர் மீதும் தாக்குதல் நடத்தியதுடன், வீட்டிலிருந்த பொருட்களுக்கும் சேதம் விளைவித்தனர்.
இதுதொடர்பில், மார்ச் மாதம் 24ஆம் திகதி பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் தேடப்பட்டு வந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்திய பொலிஸார், பண்டாரகம நீதவான் நீதிமன்றத்தில் நேற்று(3) ஆஜர்படுத்தினர்.
இதன்போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.