கொழும்பு கொட்டாஞ்சேனை மற்றும் சனநெரிசல்மிக்க பகுதிகளில் வைத்து, இளைஞர்கள் 11 பேரை கடத்தி, அவர்களின் உறவினர்களிடம் கப்பம் கேட்டு, அவர்களை காணாமலாக்கிய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றக் குற்றச்சாட்டின் கீழ், கடற்படை அதிகாரிகள் சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் வழக்குத் தாக்கல் செய்வதற்கு சட்டமா அதிபர் அவதானம் செலுத்தியுள்ளார் என அறியமுடிகின்றது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் நீண்ட விசாரணைகளை மேற்கொண்டிருந்த இரகசிய பொலிஸ் அதிகாரிகள் குழு, அவ்வாறான கடற்படை அதிகாரிகளுக்கு எதிராக, ஆவணங்கள் இல்லாத வழக்கை, நீதவான் நீதிமன்றத்தில் நடத்தாமல் நேரடியாக, மேல்நீதிமன்றத்தில் அதிக்குற்றச்சாட்டுப் பத்திரத்தை தாக்கல் செய்வதற்கு கவனம் செலுத்தியுள்ளதாக அறியமுடிகின்றது.
கடந்த காலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த இந்த சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த கடற்படை அதிகாரிகள் சிலர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.