பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை இரத்துச் செய்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்றுமாலை தீர்ப்பளித்திருந்தது.
அந்த தீர்ப்பு வழங்கப்பட்டபோது, உயர்நீதிமன்றத்தின 301ஆவது இலக்க அறையில் அருவருக்கத்தக்க சம்பவங்கள் இடம்பெற்றன.
இதனை, மனுக்களை விசாரணைக்கு உட்படுத்திய நீதியரசர் குழாமின் தலைமை நீதியரசர் யசந்த கோத்தாகொட வன்மையாக கண்டித்தார்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நேற்றுமாலை கடும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தண்ணீர் பீச்சியடிக்கும் பொலிஸ் வாகனம் உஷார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பஃபல் ரக வாகனங்களும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன
கலகமடக்கும் பொலிஸாரும் எதற்கும் தயார் நிலையில் வகைக்கப்பட்டிருந்தனர்.
உயர்நீதிமன்றத்தின் வளாகத்துக்கு நுழைந்த சகலரும் கடுமையான உடற்சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
நீதிமன்றத்துக்குள்ளும், நீதிமன்ற வளாகத்துக்குள்ளும் பெருந்திரளானோர் இருந்தனர்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்வதை தடுத்து உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அந்த மனுக்கள் கடந்த 2 ஆம் திகதிமுதல் ஆராய்ப்பட்டு, நேற்றுமாலை 6 மணியளவில் தீர்ப்பளிக்கப்பட்டது. அ
மனுக்களை தள்ளுபடி செய்வதாக மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதியரசர் யசந்த கோதாகொட தீர்ப்பளித்தார்.
இதன்போது, கோத்தாபயவின் ஆதரவாளர்கள், ஆதரவு சட்டத்தரனிகள் பலர் கரகோஷம் செய்தும், மகிழ்ச்சியில் சப்தமிட்டனர்.
இதனால், நீதிமன்றத்துக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீதிமன்ற நடவடிக்கை நிறைவுபெறாத நிலையில், தீர்ப்பின் இடை நடுவே இவ்வாறு கரகோசஷம் எழுந்தமையினால் மன்றில் இருந்த பலர் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து கோத்தாபய ராஜபக்ஷவின் சட்டத்தரணியான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா உடனடியாகவே பின்னோக்கி திரும்பி அமைதி கொள்ளுமாறு கூறினார்.
இந்த செயற்பாடுகள் தொடர்பில் தனது ஆழ்ந்த கவலையை நீதியரசர்களிடம் வெளியிட்டார்.
இதனைவிட நீதிமன்ற வளாகத்திலும் கோத்தாவுக்கான ஆதரவு கோஷங்கள் எழுப்பட்டன.
கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆயிரக்கணக்கான கூடியிருந்தனர்.
அவர்கள் பட்டாசுகளை கொளுத்தியும் வெற்றிக்கரகோஷம் எழுப்பியும் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் இருந்தனர்.
எவ்வாறாயினும் தலைமை நீதியரசர யசந்த கோதாகொட , இந்த நடவடிக்கையை மிக மோசமான , நீதிமன்றை அவமதிக்கும் செயல் என வர்ணித்ததுடன், இந்த செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருந்த அல்லது அச் செயற்பாடுகளில் ஈடுபட்ட சட்டத்தரணிகளை சட்டம் பார்த்துக்கொள்ளும் என எச்சரித்தார்.