ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் இன்று (07) நான்கு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிட் மனுக்களே இவ்வாறு தாக்கல் செய்யப்படவுள்ளன என அறியமுடிகின்றது.
இந்த நாட்டின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆகக் குறைந்த தகுதியைக்கூட கோத்தாபய ராஜபக்ஷ கொண்டிருக்கவில்லை என, அந்த மனுக்களின் ஊடாக சவாலுக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அறியமுடிகின்றது.
கோத்தாபய ராஜபக்ஷ தன்னுடைய அமெரிக்க குடியுரிமையை முறையாக விலக்கிக்கொள்ளவில்லை ஆகையால், அவர் இரட்டை குடியுரிமையை இன்னும் கொண்டிருக்கின்றார் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்படவுள்ளது.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பிரகாரம், இரட்டை குடியுரிமையை கொண்ட எவரும்,ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமுடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.