web log free
November 27, 2024

2 பெண்களும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி

எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று (07) திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை தேர்தல்கள் ஆணைக்குழுச் செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படவிருக்கிறது. ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்வார்.

தேர்தலில்போட்டியிடுவதற்காக தேர்தலில் கட்டுப்பணம் செலுத்தியுள்ள 41 பேரில் இரண்டு தமிழர்களும், நான்கு முஸ்லிம்களும், இரண்டு பெண்களும் அடங்குவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் வேட்பாளர்களாக எம். கே. சிவாஜிலிங்கம், சுப்பிரமணியம் குணரத்னம் ஆகியோரும்,

முஸ்லிம் வேட்பாளர்களாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் ஐ.எம். இல்யாஸ், ஏ. எச்.எம். அலவி ஆகியோர் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதற்தடவையாக இம்முறை கூடுதலான வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் பொது ஜனபெரமுன சார்பில் கோட்டாபய ராஜபக்‌ஷவும் ஜே.வி.பி சார்பில் அநுர குமார திசாநாயக்கவும் போட்டியிட இருப்பதோடு சிலர் அங்கீகாரம் வழங்கப்படாத கட்சிகளின் கீழ் போட்டியிடுவதும் குறிப்பிடத்தக்கது.

இம்முறை கட்சிகள் சார்பில் 19 பேரும் சுயேச்சை குழுக்கள்

சார்பில் 22 பேரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். சுதந்திரக் கட்சி சார்பில் இம்முறை எவரும் போட்டியிடவில்லை.

ஆட்சேபனை முன்வைக்க 11 மணி முதல் 11.30 வரை கால அவகாசம் வழங்கப்பட இருப்பதோடு அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்களை 12 மணிக்கு ஆணையாளர் அறிவிப்பார்.

வேட்புமனுக்களை இன்று திங்கட்கிழமை (7) காலை தேர்தல் ஆணைக்குழுவில் ஏற்றுக்கொள்வதற்கு சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தேர்தல் செயலக வளாக பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வேட்பாளருடன் அனுமதி பெற்ற இருவருமாக மூவர் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்களென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.

 இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதற்தடவையாக அதிக எண்ணிக்கையான வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இம்முறை தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் வழமைக்கும் மாறான வேலைப்பளுவுக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் இதுவரை 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாவும் அறிவிக்கப்படுகிறது.

கூடுதலான வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஜனாதிபதி தேர்தலுக்கான செலவு பல மில்லியன் ரூபாய்கள் அதிகரிக்கலாம் என ஆணையாளர் கூறியுள்ளார்.

இன்று காலை முதல் ராஜகிரிய பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட சுமார் 02 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

புலனாய்வு அதிகாரிகளும் இங்கு கடமைகளை முன்னெடுக்கவுள்ளனர். வேட்புமனு தாக்கலுக்கு முன்னரும் பின்னரும் வீதிகளில் ஊர்வலங்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எவரும் போட்டியிடாத ஜனாதிபதி தேர்தலாக இம்முறை இத் தேர்தல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக இந்தோனேசியா, இந்தியா,அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் மாலைதீவு ஆகிய ஐந்து நாடுகளுக்கு உத்தியோகப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஐரோப்பிய ஒன்றியமும் பொதுநலவாய கண்காணிப்பு அமைப்பும் சுயவிருப்பின்பேரில் இலங்கைக்கு வருகைதர இருப்பதாகவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்கள் அதிகரித்துள்ளதால் இம்முறை அதிக எண்ணிக்கையிலான வாக்கு எண்ணும் நிலையங்கள் தேவைப்படுவதுடன், செலவும் அதிகரிக்கும்.

தற்போது ஜனாதிபதி தேர்தலுக்காக நான்காயிரம் மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது. இது 4500 மில்லியன்கள் வரை அதிகரிக்குமென எதிர்பார்த்திருந்தோம். எனினும் கட்டுப்பணம் செலுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதனால் செலவீனம் சுமார் 05 ஆயிரம் மில்லியன் ரூபாய் வரை அதிகரிக்கலாமென்றும் அறிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய கண்காணிப்பு அமைப்புக்கள் தமது சுய விருப்பின்பேரில் இலங்கை வரவுள்ளன.

உத்தியோகப்பூர்வ கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக இந்தோனேசியா, இந்தியா, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் மாலைதீவு ஆகிய ஐந்து நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் எதிர்வரும் 10 ஆம் திகதியளவில் நாட்டுக்கு வருகை தரவுள்ளனர்.

மேலும் கற்கை நடவடிக்கைகளுக்காக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம்,தென்கொரியா,அவுஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், மியன்மார், இந்தோனேசியா, பூட்டான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான உள்ளூர் போக்குவரத்து மற்றும் தங்குமிடவசதிகளுக்கான ஏற்பாடுகளை மட்டுமே தேர்தல் ஆணைக்குழு முன்னெடுக்க உள்ளது.

Last modified on Monday, 07 October 2019 02:22
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd