நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன நடுநிலையுடன் செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு அமைச்சராக மற்றும் அமைச்சரவையின் பிரதானியாக தமது கடமைகளை தேர்தல் காலத்தில் உறுதிப்படுத்துவதற்கு இந்த முடிவை ஜனாதிபதி எடுத்துள்ளார்.
இதன் காரணமாக கட்சியின் பதில் தலைவராக முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு சு.கவின் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் கொழும்பு, மருதானை டார்லி வீதியில் அமைந்துள்ள சு.கவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு ஜனநாயகத் தலைவர். 2015ஆம் ஆண்டைப்போன்று இம்முறையும் ஜனநாயக ரீதியான தீர்மானமொன்றை அவர் எடுத்துள்ளார்.
இடதுசாரி அரசாங்கமொன்றை அமைப்பதற்கான ஆதரவை அவர் வழங்கியுள்ளார். இத்தேர்தலில் அவர் நடுநிலையாகச் செயற்பட முடிவெடுத்துள்ளார்.
அதன் காரணமாக எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதிவரை எமது கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ செயற்படவுள்ளார்.
அத்துடன், தேர்தலை வழிநடத்த 15 பேர் கொண்ட அரசியல் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு பொதுஜன பெரமுனவுடன் இணைந்து அரசியல் நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் எவருக்கும் எதிரானதல்ல. நாட்டின் ஜனநாயகத்தையும் சட்டத்தையும் உறுதி செய்யும் வகையில் எடுக்கப்பட்ட தீர்மானமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.