ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்தில் களமிறங்கியிருக்கும் புதிய ஜனநாயக முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம், காலி முகத்திடலில் பெருந்திரளான மக்கள் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
வரலாற்றை புரட்டிபோட்ட இந்த கூட்டத்தில், நாடளாவிய ரீதியிலிருந்து வருகைதந்திருந்த இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்தனர்.
காலிமுகத்திடல் எங்குமே மக்கள் தலைகள் மட்டுமே கண்களுக்குத் தெரிந்தன.
கடல் எது? கரை எது என்று தெரியாத அளவுக்கு கடலுடன் சங்கமிக்கும் வகையிலேயே ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர்.
இதனை, பிரதான மேடையிலிருந்து பார்த்த, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் அனைவரும் பிரமித்துநின்றனர்.
உரையாற்றிய அனைவரும், மக்கள் வெள்ளத்தில் மிதந்து, ராஜபக்ஷ அணியினருக்கு சவால் விடுக்கும் வகையிலேயே உரைகளை நிகழ்த்தினர்.
சஜித் பிரேமதாஸ, ஆதரவாளர்களின் அரவணைப்புடன் மேடைக்கு அழைத்துவரப்பட்டார்.
சுமார் அரை மணிநேரத்துக்குப் பின்னரே, பிரதான மேடையை சஜித் பிரேமதாஸ வந்தடைந்தார்.
அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் வாய்தவறி கூறிய வசனத்துக்காக, சகலரிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார்.
நான், ஆதரவாளர் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றிருந்தேன். அதற்கான சந்தரப்பம் கிடைத்தது.
வாய் தவறி தான் கூறிய அந்த வசனத்துக்காக இலங்கையில் வாழும் சகல பிரஜைகளிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன் என இருகரம் கூப்பி மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
பௌத்தத்தை நிந்திக்கும் வகையிலேயே, அவர் வசனமொன்றை அண்மையில் கூறியிருந்தார்.
இதனை மஹிந்த அணியினர் உள்ளிட்டோர் கடுமையான விமர்சனங்களுக்கு உட்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தனக்காக காலி முகத்திடலுக்கு வந்திருக்கும் ஒவ்வொருவரின் பாதங்களுக்கு அண்மையில் வந்தே வரவேற்றிருக்க வேண்டுமென தெரிவித்த அவர், தன்னால் தற்போதைக்கு வரமுடியாது. அதற்கான நேரமும் இல்லை எனத் தெரிவித்த அவர், இரு கரம் கூப்பி, அனைவரையும் வரவேற்றது. அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்துவிட்டது.