ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழித்து நாசமாக்கிய ராஜபக்ஷ குடும்பத்திற்கு எந்த வகையிலும் ஒத்துழைப்பை வழங்க முடியாது என ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பினால் நேற்று (10) பொரளை என். எம். பெரேரா நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது கேகாலை மாவட்ட ஸ்ரீ.ல.சு.கட்சியின் அமைப்பாளர் பண்டார அத்துகோரள இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, “இன்று நாம் 68 வருட ஸ்ரீ.ல.சு.கட்சி அரசியல் வரலாற்றில் மிகவும் தீர்க்கமான தடை தாண்டல் நிலைக்கு வந்திருக்கின்றோம்.
அந்த தடை தாண்டல் 2015 ஜனவரி 08ம் திகதி இடம்பெற்ற அந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அந்த தேர்தலில் இந்நாட்டின் 62 இலட்சம் வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கும்பல் வீட்டுக்குச் சென்று சும்மா இருக்கவில்லை.
அவர்கள் ஸ்ரீ.ல.சு.கட்சியை அழித்து நாசமாக்குவதற்கான சதியினை ஆரம்பித்தார்கள். ராஜபக்ஷ ஜன்னலில் தொங்கிக் கொண்டு ஆரம்பித்த ஸ்ரீ.ல.சு.கட்சியை அழிக்கும் சதி நாளுக்கு நாள் வளர்ந்து இன்று ஸ்ரீ.ல.சு.கட்சியில் இருந்த 87 பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 ஆகக் குறைவடையும் நிலைக்கு வந்திருக்கின்றது” என்றார்.