web log free
November 27, 2024

‘20 வீதமான முஸ்லிம் வாக்காளர்கள் நீக்கம்’

மன்னார் மாவட்டத்தில் சுமார் 20வீதமான முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இது முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் தெரிவித்தார்.  

மன்னாரில் நேற்று வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,

2019ஆம் ஆண்டு மன்னார் மாவட்ட வாக்காளர் இடாப்பிலிருந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கோரிக்கை கடிதம் ஒன்றை மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ளேன்.  

 

 

கடந்த பல வருடங்களாக மன்னார் மாவட்டத் தேர்தல் இடாப்பில் பெயர்கள் குறிப்பிடப்பட்டு தொடர்ச்சியாக சுமார் 20வருடங்களுக்கு மேலாக வாக்களித்து வந்த சிலரது பெயர்கள் இம்முறை வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பலர் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவ்வாறு வாக்காளர் இடாப்பிலிருந்து பெயர் நீக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணான செயல் என்றும், இதற்கு எதிராக தகுதி வாய்ந்த நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்டவர்கள் என்னை நாடியுள்ளனர்.   நான் முதற்கட்ட நடவடிக்கையாக மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளருக்கு கோரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளேன். மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரையில் சுமார் 25வீதமான முஸ்லிம் வாக்காளர்கள் இருக்கின்றார்கள்.

அதில் சுமார் 20 வீதமான வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளமையானது முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Last modified on Sunday, 13 October 2019 15:47
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd