‘இலங்கை இந்து தேசிய மகாசபை’யை உருவாக்குவதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான அமைச்சர் மனோ கணேசனால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மனோ கணேசன்,
” தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் என்ற முறையில் என்னால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட மேற்படி யோசனை அமைச்சரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, இந்நாட்டில் இந்து சமய விவகாரங்கள் தொடர்பில் தேசியரீதியாக ஒன்பது மாகாணங்கள், அனைத்து மாவட்டங்கள், அனைத்து பிரதேச செயலக பிரிவுகள் என்ற அடிப்படைகளில் நாடு தழுவிய வலைப்பின்னல் அமைப்பு சட்டப்படி உருவாக்கப்படும்.
நாடெங்கும் பிரதேச, மாவட்ட சபைகள் உருவாக்கப்பட்டு, அவற்றில் இருந்து தேசிய சபை உருவாக்கப்பட்டு, முழு நாட்டிலும் வாழும் இந்துக்கள் மத்தியில் ஐக்கியத்தையும், ஒரு சமச்சிரான அணுகுமுறையையும், அதேவேளையில் ஏனைய சகோதர மதத்தவருடன் இணக்கப்பாட்டையும் இலங்கை இந்து தேசிய மகாசபை ஏற்படுத்தும்.
இதில், நாடெங்கும் உள்ள இந்து மத குருமார்கள், ஆலய அறங்காவலர்கள், அறநெறி பாடசாலைகள், இந்து கல்லூரிகள், இந்து சமூக அமைப்புகள் ஆகிய ஐந்து இந்து மத தூண்களும் கூட்டிணைக்கப்படும்.
இந்து மதம் தொடர்பில் அதிகாரபூர்வமாக இந்த நிறுவனம், இலங்கைக்கு உள்ளேயும், வெளிநாடுகளிலும் இலங்கை இந்து மதத்தவர்களை பிரதிநிதித்துவம் செய்யும்.” என்றார்.