இலங்கை தேர்தல் வரலாற்றில் மிக நீளமான வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணிகள், தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன.
அந்த வாக்குச்சீட்டில் முதலாவது பெயர், எபருக்க புஞ்ஞானந்த தேரரின் பெயர் உள்ளது. அவருடைய சின்னம் “நாள்” ஆகும்.
இந்த தேர்தலில் மொத்தமான 35 பேர் போட்டியிடுகின்றனர். அதில், முன்னாள் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்கவின் பெயர் இறுதியாகவுள்ளது. அவருடைய “சின்னம் மின்குமிழ்” ஆகும்.
ஜனாதிபதித் தேர்தலில் பெரிதும் பேசப்படும் வேட்பாளர்களான, ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க இம்முறை, திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடுகின்றார். அவர், வாக்குச்சீட்டில் 12ஆவது இடத்தில் இருக்கின்றார்.
“அன்னம்“ சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பெயர் 19ஆவது இடத்தில் உள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுகின்றார்.
அவருடைய பெயர், வாக்குச்சீட்டில் 25ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.