web log free
November 28, 2024

“ராஜீவை புலிகள் கொன்றது சரி”

காந்தியைக் கொலை செய்தது கோட்ஸே, அவரை கொலை செய்தது சரிதான் என ஒரு கூட்டத்தினர் பேசுவது போன்றதுதான், விடுதலைப்புலிகள் அமைப்பு ராஜீவ் காந்தியை கொலை செய்த விவகாரமும்” என்று சர்ச்சைக்குரிய விதத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதால், அவர் மீது விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில் உரை நிகழ்த்திய சீமான், ”விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைப் பயங்கரவாதி, தீவிரவாதி என்கிறார்கள். காந்தியை சுட்டது கோட்ஸே, அவர் செய்தது சரி என ஒருகூட்டம் பேசுகிறது. இணையத்தில் அந்த தகவல் இருக்கிறது. அதேபோலத்தான் ராஜிவ் காந்தியை கொலை செய்ததும்,” எனப் பேசினார்.

சீமானின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சீமான் மீது தேசத்துரோக வழக்குப் போடவேண்டும் என்றும், அவரது கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல்தலைவர் ஜெயக்குமார், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதியிடம் சீமானை கைது செய்யவேண்டும் எனப் புகார் அளித்துள்ளார்.

விக்கிரவாண்டி காவல்நிலைய அதிகாரிகள், பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினர்.

தான் தெரிவித்த கருத்தால் திரும்பபெறபோவதில்லை என சீமான் உறுதியாக தெரிவித்துள்ளார்.

ஏழு பேரும் விடுதலைசெய்யப்படவேண்டும்

இதனிடையே, பாமக நிறுவனர் ராமதாஸ் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் ஏழு பேரும் விடுதலைசெய்யப்படவேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை விமர்சனம் செய்து ட்விட்டரில் பதிந்துள்ளார்.

”ராஜிவ் கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட 7 தமிழர்களும் இரு மடங்கு தண்டனையை அனுபவித்து விட்டனர். அவர்களை தமிழக அரசு விடுவிக்கலாம் என உச்சநீதிமன்றமும் கூறிவிட்டது. இதன்பிறகும் அவர்களின் விடுதலையை தமிழக காங்கிரஸ் எதிர்க்கிறது என்றால், அவர்களின் மனித நேயம் போற்றத்தக்கது. பஞ்சாபில் காங்கிரஸ் முதல்வர் பியாந்த்சிங்கை படுகொலை செய்த பயங்கரவாதியை விடுதலை செய்ய தற்போதைய காங்கிரஸ் முதல்வரே பரிந்துரை செய்கிறார். மத்திய அரசும் அதை ஏற்கிறது. இன உணர்வு என்றால் என்ன? என்பதைப் பஞ்சாப் காங்கிரசிடம் தமிழக காங்கிரஸ் கற்க வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலையை தமிழக காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. கூட்டணி கட்சியான காங்கிரசின் இந்த நிலைப்பாட்டை திமுக ஏற்கிறதா? என்பதை அக்கட்சியின் தலைமை விளக்க வேண்டும்,” என ட்விட்டரில் கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

Last modified on Tuesday, 15 October 2019 03:24
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd