web log free
November 28, 2024

ஆன்மீக தலைவர் மஹிந்த- பசில்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடு இருக்காது என தான் எண்ணுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது எந்தவொரு தரப்புக்கும் அரசாங்கத்தை மாற்றுவதற்கு எண்ணம் இருந்திருக்குமானால் அதற்கான காரணத்தை தற்போது நன்கு உணர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டில் தமது அரசங்கத்தை மாற்றுவதற்கு இந்தியா அல்லது வேறு நாடுகள் அப்போதைய எதிர்க் கட்சிக்கு ஆதரவளித்தமை குறித்த எந்தவித தனிப்பட்ட சாட்சியங்களும் தன்னிடம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அயல் மற்றும் நட்பு நாடு என்ற வகையில் பாதுகாப்பு, அரசியல் நிலைப்பாடுகளில் இந்தியாவுடன் ஒத்துழைத்து செயற்படுவது அத்தியாவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் பொருளாதார ரீதியில் சீனாவுடன் இணைந்து செயற்படுவதும் முக்கியமானது எனவும் பசில் ராஜபக்ஸ அந்த செவ்வியில் கூறியுள்ளார்.

மேலும் ஜனாதிபதி தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் தீர்மானமிக்கவை என கூறியுள்ளார்.

மேலும் தேசிய பிரச்சினைக்கு தீர்வாக புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டுமானால் அது குறித்து தீர்மானிப்பதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதிகாரத்தை பகிர்ந்தளிக்க தனது கட்சி எந்தவொரு அர்ப்பணிப்பையும் செய்ய தயாராக இருப்பதாகவும் பசில் ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜனாதிபதிக்கு உரிய அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளமை குறித்து ஊடகவியலாளர் வினவியுள்ளார்.

இதற்கு பதிலளித்த பெசில் ராஜபக்ஸ அவ்வாறான சூழ்நிலையிலும் கூட தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு பிரதமர் என்ற வகையில் அரசாங்கத்தின் பிரதானியாக இருப்பதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ ஒரு ஆன்மீக தலைவர் என்றும் பசில் ராஜபக்ஷ தனது செவ்வியில் தெரிவித்துள்ளார். 

Last modified on Tuesday, 15 October 2019 02:40
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd