எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்காமல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏன் நடுநிலை வகிக்கின்றார் என்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர, விளக்கமளித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே கீழ் கண்டவாறு விளக்கமளித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே, பொலிஸ் திணைக்களத்துக்கு பொறுப்பாக இருக்கின்றார். அவரே, பாதுகாப்பு அமைச்சராகவும் இருக்கிறார்.
இந்நிலையில், நீதியும் நேர்மையானதுமான தேர்தலை நடத்தும் வகையிலேயே, மைத்திரிபால சிறிசேன நடுநிலை வகிப்பதற்கு தீர்மானித்துள்ளார்.
எனினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒன்றிணைவதற்கும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பூரண ஆதரவு நல்கினார் என்றார் மஹிந்த அமரவீர