web log free
November 28, 2024

கோத்தா விவகாரம்- மனு நிராகரிப்புக்கு இதுதான் காரணம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் இரட்டை குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து தீர்ப்பு வழங்கியமைக்கான காரணங்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று வெளியிட்டது.

இந்த வழக்கில் ஆறாவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐந்தாவது பிரதிவாதியான கோத்தாபய ராஜபக்ஷவின் இரட்டை குடியுரிமை சான்றிதழில் 2005 நவம்பர் 21ஆம் திகதி கைச்சாத்திடுவதற்கு அரசியலமைப்பின் கீழ் சட்ட அதிகாரம் இருந்ததாக மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியது. இதன் காரணமாகவே மனுவை நிராகரித்து

ஏகமனதாக தீர்ப்பளித்ததாகவும் நீதியரசர்கள் கூறினர்.

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ இலங்கை பிரஜை என்று கூறுவதையும் அவர் இரட்டை பிரஜாவுரிமையின் அடிப்படையில் செயற்படுவதையும் கட்டுப்படுத்தும் வகையிலான இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்களான காமினி வியங்கொட மற்றும் பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர ஆகியோர் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த அக்டோபர் 4ஆம் திகதி இந்த வழக்கை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான யசந்த கோதாகொட, அர்ஜுன ஒபேசேகர மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோரைக் கொண்ட குழுமம் மனுவை நிராகரித்ததுடன் அதற்கான காரணத்தை பின்னர் கூறுவதாக தெரிவித்திருந்தது.

கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டை குடியுரிமை சான்றிதழ் செல்லுபடியற்றது என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தால், அது கோத்தாபயவின் உரிமைகளையும் நலன்களையும் நேரடியாக பாதித்திருப்பதுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரனை கட்சி மீது தவறான அபிப்பிராயத்தையும் ஏற்படுத்தியிருக்கும்.

எனவே, ஸ்ரீலங்கா பெரமுன கட்சியை மனுவில் பிரதிவாதியாக சேர்க்காமை மனுதாரர்கள் விட்ட தவறு என்று கூறிய நீதியரசர்கள் இந்த அடிப்படையிலும் மேற்படி மனு நிராகரிக்கப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தனர்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd