ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ள கருத்துகள் தொடர்பில் இத் தருணத்தில் நான் எதையும் கூற விரும்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் தொடர்பில் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை உண்டுபண்ணியுள்ளது.
இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் காணாமல்போனமை தொடர்பில் ஆதாரங்கள் இல்லையென கோத்தாபய ராஜபக்ஷ, ஊடகவியலாளர் சந்திப்பில் பதிலளித்திருந்தார்.
இந்நிலையிலேயே அதுதொடர்பில் சம்பந்தனிடம் வினவப்பட்டது.
அதன்போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஆனால், அவர்களது தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டதன் பின்னர் அனைத்துக்கும் பதிலளிப்பேன் என தெரிவித்துள்ளார்.
கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் நடத்திய முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பில், இறுதி யுத்தம் தொடர்பில் ஊடகவியலாளர்களால் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.
இதற்கு பதிலளித்திருந்த அவர், இறுதி யுத்தத்தை நான் வழிநடத்தவில்லை. சரணடைந்தவர்கள் எவரும் கொல்லப்படவில்லை என இறுதி யுத்தம் தொடர்பில் அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளிலிருந்து நழுவும் வகையில் கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.