பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோத்தாபய ராஜபக்ஷ, ஒரு நாளேனும் யுத்தக்களத்துக்கு வருகைதரவில்லை. யுத்தத்தை முன்னெடுப்பதற்கான எந்தவொரு ஆலோசனையையும் தனக்குத் தரவில்லை. என்னும் ஆலோசனையின் பிரகாரமே பயங்கரவாதிகளை தோற்கடித்தேன் என முன்னாள் இராணுவத் தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
அன்றைய யுத்தம் தொடர்பில் கோத்தாவுக்கு எவ்விதமான அறிவும் இருக்கவில்லை. 5 இலட்சம் இராணுவத்தினர் இருந்தனர் என்கிறார். பொலிஸாருடன் சேர்த்து கணக்குப் பார்த்தாலே மொத்தமாக 3 இலட்சம் படையினரே இருந்தனர் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று( 18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர்,
1. இராணுவத் தளபதியாக இருந்த தான், பூமியை கைப்பற்றும் முயற்சியை முன்னெடுக்கவில்லை. பயங்கரவாதிகளை அழித்தொழித்தேன்.
2. பயங்கரவாதிகளை அழிக்காமல் பூமியை கைப்பற்றிக்கொண்டிருந்தால், பயங்கரவாதிகள் மீண்டும், மீண்டும் அந்தப் பூமியை பிடிப்பார்கள்.
3. பயங்கரவாதிகள் 35 ஆயிரம் பேர் இருந்தனர். அதில், 23 ஆயிரம் பேர் அழிக்கப்பட்டனர். ஏனைய 12 ஆயிரத்துக்கு அண்மித்த தொகையினர் கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டனர்.
4. டைக் கோட் அணிந்தவர்களின் கட்டளையை படையினர் பின்பற்றமாட்டார்கள்.
5. சீருடைத்தரித்த அதிகாரிகளின் கட்டளையையே படையினர் பின்பற்றுவர்.
6. பாதுகாப்பையும் அரசியலையும் போட்டுக் குழப்பிக்கொள்ளத் தேவையில்லை.
7. கோத்தாபய ஜனாதிபதியானால், பாதுகாப்பு செயலாளராக இருந்துகொண்டு செய்ததையே செய்வார். அல்லது பிரதமரின் கட்டளையையே பின்பற்றுவார்.
8. அதற்கு நல்ல உதாரணம், ஊடகவியலாளர்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர், தன்னுடைய அண்ணன் மஹிந்த ராஜபக்ஷவிடமே கேட்டு பதிலளிக்கின்றார்.
9. சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியானால், தனக்கு பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கினாலும் வழங்காவிட்டாலும், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் என்றவகையில், சஜித்தின் வெற்றிக்காக உழைப்பேன் என்றார்.
10. பயங்கரவாதம் மீண்டும் தலைத்தூக்காமல் இருக்கவேண்டுமாயின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யோசனைகளை பார்க்கவேண்டும். அதிலும், பிரிக்கப்படாத நாடு தொடர்பிலான யோசனையில் கவனம் செலுத்தவேண்டும் என்றார்.