web log free
May 12, 2024

மைத்திரி, சந்திரிகா திரும்பியதும் அதிரடி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் நாடு திருப்பியதன் பின்னர் இலங்கை அரசியலில் அதிரடியான மாற்றங்கள் பல முன்னெடுக்கப்படவுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய குடும்பத்தார் சகித்தம் 21 பேர் அடங்கிய தூதுக்குழுவுடன் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

ஜப்பானிய பேரரசராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நருஹிதோ பேரரசரின் முடிசூட்டு விழாவில் பங்குபற்றுவதற்காக ஜப்பான் நோக்கி பயணித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (21) மாலை டோக்கியோ, நரீடா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.

ஜப்பான் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பையேற்றே ஜனாதிபதி ஜப்பானுக்கான இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

பல உலகத் தலைவர்கள் பங்குபற்றும் இவ்விழா நாளை பிற்பகல் டோக்கியோ நகரில் உள்ள இம்பீரியல் அரச மாளிகையில் இடம்பெறவுள்ளது. விழாவை தொடர்ந்து இடம்பெறவுள்ள புதிய பேரரசர், அரச தலைவர்களுக்கான விருந்துபசார நிகழ்விலும் ஜனாதிபதி பங்குபற்றவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேவையும் சந்திக்கவுள்ளார்.

ஜப்பான் நாட்டின் பேரரசராக உள்ள அகிஹித்தோ பேரரசர் முப்பது வருடங்களுக்குப் பின்னர் கடந்த மே மாதம் தனது பதவியிலிருந்து விலகிக்கொண்டார். 1817 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவ்வாறு தனது பதவியை விட்டு விலகிய முதலாவது ஜப்பானிய பேரரசராக இவர் உள்ளார். 2019 மே மாதம் 01 ஆம் திகதி முடிக்குரிய இளவரசரான நருஹிதோ ஜப்பானின் 126வது பேரரசராக நியமிக்கப்பட்டார்.

அம்மையார் சந்திரிகா

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, கடந்த சனிக்கிழமை நாடு திரும்புவதாக இருந்தது. எனினும், இவ்வாரமே அவர் நாடுதிரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலண்டனுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் அவர், நாடு திரும்பியதும் இலங்கை அரசியலில் அதிரடியான மாற்றங்கள் ஏற்படக்கூடுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம அவருடன் இணைவார் என்றும், அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவும் இணையவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை காப்பாற்றும் வகையிலேயே இவ்விருவரும் இணைய உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, முக்கியமான மூன்று சம்பவங்கள் தொடர்பில் தன்னிடமிருக்கும் கோவையை பகிரப்படுத்தி, இலங்கை அரசியலிலும் ஜனாதிபதித் தேர்தலிலும் புதுவகையான புரட்சியை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார் என அறியமுடிகின்றது. 

Last modified on Tuesday, 22 October 2019 17:43