web log free
September 08, 2024

தகுந்த தண்டனை வழங்கவும்- சாந்தி எம்.பி

ஞானசார தேரர் உள்ளிட்ட 4 பேரை நவம்பர் மாதம் 8 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (21) உத்தரவு பிறப்பித்துள்ளது.

முல்லைத்தீவு நாயாறு குருகந்த ரஜமஹா விஹாராதிபதியின் இறுதிக்கிரியை தொடர்பான நீதிமன்றின் உத்தரவை மீறிய வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரர், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஶ்ரீஸ்கந்தராசாவால்  அண்மையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த நீதிமன்ற அவமதிப்பு மனு, மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதியரசர்கள் யசந்த கோதாகொட மற்றும் அர்ஷுன ஒபயசேகர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுவுக்கு ஆதரவாக ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர்  மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது, பிரதிவாதிகளை நவம்பர் 8 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, நீதியரசர்கள்  உத்தரவு பிறப்பித்தனர்.

ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் 6 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஞானசாரதேரருக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. 

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டுள்ளார். ஆகையால், தகுதியான தண்டனையை அவருக்கு வழங்குமாறும் மனுதாரரான பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்க்நதராசா கோரியுள்ளார்.