தனது காதலை எச்சரித்த அதிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமொன்று பிரபல பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.
அதிபரின் அறையில் வைத்தே மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலினால், கடுமையான காயங்களுக்கு உள்ளான அந்த அதிபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
23ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, அந்தப் பாடசாலையின் சகல ஆசிரியர்களும் எவ்விதமான கல்வி நடவடிக்கைகளையும் முன்னெடுக்காமல், எதிர்ப்பு நடவடிக்கைகளில் நேற்று (24) ஈடுபட்டனர்.
கம்பளை கல்வி வலயத்துக்குட்பட்ட உலப்பனையிலுள்ள முஸ்லிம் பாடசாலையொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
11 தரத்தில் பயலும் மாணவன், காதல் வலையில் விழுந்துள்ளார்.
அதனை அப்பாடசாலையில் அதிபர் எச்சரித்து, மாணவனை அழைத்து அறிவுரை கூறியுள்ளார்.
அறிவுரையை ஏற்றுக்கொள்ள மறுத்த அந்த மாணவன், உலப்பனையிலிருக்கும் தனது தந்தைக்கு கோல் எடுத்து, அதிபர் தன்னை கடுமையாக தாக்கிவிட்டார் என அழுதுள்ளார்.
ஆவேசமடைந்த தந்தை, தன்னுடைய இன்னுமொரு மகனுடன் வருகைதந்து, அதிபரின் அறைக்குள் வைத்தே அதிபரை தாக்கியுள்ளனர்.
இதனால் அதிபர் கடும் காயங்களுக்கு உள்ளானார்.
அறையிலிருந்த பொருட்களுக்கும் கடும் சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளன.
இந்த காதல் விவகாரம் தொடர்பில் ஏற்கனவே தெரிந்திருந்த எட்டாம் வகுப்புக்கு பொறுப்பான ஆசிரியர், அந்த மாணவனை எச்சரித்துள்ளார். அதன்போது, அவ்வாசிரியரையும் அந்த மாணவன் தாக்குவதற்கு முயற்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பாடசாலைக்கு புதிதாக வந்து சேர்ந்த மேற்படி மாணவன் தொடர்பில், பல்வேறான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் உள்ளனவென அறியமுடிகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்..