web log free
November 28, 2024

நீராவியடி பிள்ளையாருக்கு புதிய சோதனை

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் தொல்பொருள் சிதைவுகள் இருப்பதாக  பௌத்த மதகுருமார்களிடம் விகாரை தரப்பு காண்பித்ததனால் புதிய சர்ச்சை ஒன்று நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தோன்றியுள்ளது.

 முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து பௌத்த மதகுரு ஒருவர் அங்கு விகாரை அமைத்து குடியிருந்த நிலையில் அந்த பகுதியில் பல்வேறு சிக்கல் நிலைமைகள் தோன்றியிருந்தது.

அதனை தொடர்ந்து குறித்த விகாரையில் குடிகொண்டிருந்த விகாராதிபதி மரணமடைந்ததை தொடர்ந்து, அவரது உடலை நீதிமன்ற அனுமதியையும் மீறி ஆலய கேணிக்கு அருகில் தகனம் செய்தமையினால் அந்த பகுதியில் பாரிய பிரச்சினைகள் உருவாகி அதனை தொடர்ந்து பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட நிலையில் மிக பாரிய சர்ச்சை ஒன்று அந்த பகுதியில் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இன்று கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த பௌத்த மதகுருக்கள் 30 பேர் அளவில் பேருந்து ஒன்றில் குறித்த நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த விகாரையை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்தனர்.

இதன்போது வருகை தந்த பௌத்த மதகுருக்கள் உள்ளிட்டவர்களிடம் இந்த ஆலய வளாகம் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது எனவும் இந்த இடத்திலே தொல்பொருள் ஆதாரங்கள் இருப்பதாகவும் குறித்த ஆதாரங்கள் தொடர்பாகவும் அவர்கள் பார்வையிட்டார்கள்.

அந்தவகையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு எதிர்ப்பக்கமாக அமைந்திருக்கின்ற இராணுவ முகாமில் தொல்பொருள் சின்னங்கள் சில ஒரு கண்காட்சி கூடமாக அமைக்கப்பட்டிருக்கின்றது.

இந்த தொல்பொருள் சிதைவுகள் வைக்கப்பட்டிருக்கின்ற பகுதியின் ஒரு பகுதி இராணுவத்தினரின் தங்குமிடமாகவும் காணப்படுகின்றது. அதேபோன்று குறித்த ஆலய வளாகத்தை சுற்றி காணப்படுகின்ற பிரதேசத்திற்குள் தொல்பொருள் திணைக்களம் அதனுடைய அடையாள கற்களை நாட்டி உள்ளதோடு ஒரு சில தொல்பொருள் சிதைவுகளும் குறித்த காட்டுப் பகுதிகளில் தற்போது காணப்படுகின்றன.

இவற்றை பார்வையிடட பின்னர் வருகை தந்த பௌத்த மதகுருமார்கள் இது தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான இடம் எனவும் அரசாங்கம் இதனை பாதுகாக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் இருந்த பல்வேறு சிக்கல் நிலைமைகளின் மத்தியில் தற்போது இது ஒரு புதிய வடிவமாக பாரிய ஒரு பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.

ஆலய நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது, அவர்கள் இவ்வாறு எந்த ஒரு சிதைவுகளும் அல்லது எந்த ஒரு பொருட்களுமே எமது ஆலய வளாகத்தில் இதுவரை காலமும் இருக்கவில்லை எனவும் அது திட்டமிட்டு கொண்டு வரப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கின்றார்கள்.

எனவே, நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தை பொறுத்தளவில் மீண்டும் ஒரு புதிய சர்ச்சையை தோற்றுவித்திருக்கின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd