web log free
September 08, 2024

முஸ்லிம்களிடம் வாக்கு கேட்பது வேடிக்கை- ரிஷாத்

தேசியப்பட்டியல் எம்.பி பதவிக்கும் தூதுவர் பதவிக்கும் நிறுவனங்களின் தலைவர் பதவிகளுக்கும் சோரம் போன நம்மவர்கள் கொந்தராத்து ஒப்பந்தங்களை எடுத்துக்கொண்டு முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் வாக்கு கேட்டுவருவது வேடிக்கையானது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்தில், பானகமுவ, தல்கஸ்பிட்டிய, தித்தவெல்கல, தோரக்கொட்டுவ, சியம்பலகஸ்கொட்டுவ, கலேகம, ஹொரம்பா ஆகிய பிரதேசங்களில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டங்களில் அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அமைச்சர் கூறியதாவது ; நமது சமூகம் நொந்து போயிருக்கின்றது. சுமார் 10 வருடங்களாக நிம்மதியை தொலைத்து அமைதியை இழந்து ஏக்கத்துடன் வாழ்கின்றோம். யுத்தம் முடிந்த கையோடு ஒரு கூட்டம் நமது சமூகத்தின் மீது தமது இனவாதப் பார்வையை செலுத்த தொடங்கியது.

நமது மதக் கடைமைகளை செய்ய விடாமல் தடுத்தது.

எவ்வித காரணங்களும் இன்றி பள்ளிவாயல்களையும் உடைமைகளையும் மத்ரசாக்களையும் வீடுகளையும் நாசப்படுத்தியது. இந்த அட்டூளியங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு அப்போது கோரிக்கை எழுந்த போதும் கடந்த அரசாங்கம் அதனைச் செய்யவில்லை. வன்முறைகளை கட்டுப்படுத்தவுமில்லை இனவாதிகளை வளர்த்து இன்பம் கண்டது.

எனவே தான் முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு ஆட்சியை மாற்றி அமைத்தது.

அரசியல் தலைமைகளும் சமூகத்தின் வழியில் பயணித்தன மைத்திரியை கொண்டுவந்தோம் நல்லாட்சி என்ற போர்வையில் இரண்டு கட்சிகள் ஆட்சியை நடத்தியதால் ஏற்பட்ட இழுபறியின் காரண்மாக நமது சமூகத்தின் எதிர்பார்ப்பு வீணாகியது . நிம்மதி கிடைக்கவில்லை அமைதி இழந்து தவித்தோம். திகன, ஜிந்தோட்ட, அம்பாறை ஆகிய இடங்களில் நாசகாரிகள் தமது செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுத்தனர்.

Last modified on Tuesday, 29 October 2019 01:02