web log free
November 28, 2024

“ கோத்தாவின் இரத்தத்தில் சந்தேகம்- காயங்கள் எங்கே?”

ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் தெற்கில் இளைஞர்களைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கியும், படுகொலை செய்யும் கொலைகார வெள்ளை வேன் கலாசாரத்தை உருவாக்கி முன்னெடுத்துச் சென்றமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கா தெரிவித்துள்ளார்.  

சமூக வலைத்தளத்துடன் இடம்பெற்ற நேர்காணலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“வெள்ளை வேன் கலாசாரம் ஒன்றிருந்ததை நாம் எம் இரண்டு கண்களாலும் கண்டோம். இது ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா?”  கேட்ட கேள்விக்கு தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கா இவ்வாறு பதிலளித்துள்ளார்.

“மிகத் தெளிவாகவே ஏற்றுக் கொள்கின்றேன். பிரச்சினை இருப்பது யார் செய்தது? யாரின் தேவைக்காகச் செய்யப்பட்டது? என்பதில்தான். அப்பாவியான சில இராணுவ படை வீரர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள். இதற்குப் பொறுப்புக் கூற வேண்டியது அந்த இராணுவ வீரர்கள் அல்ல. அதனைச் செய்ய உத்தரவிட்டவர்களேயாகும்”

அவருடனான பேட்டியின் சில கேள்வி பதில்களை இங்கு தருகின்றோம்.

 கோட்டாபய ஒரு ஜனாதிபதி வேட்பாளர். கோட்டாபய தொடர்பில் நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?

இராணுவத்தில் நான் குறுகிய காலம் பணியாற்றியிருக்கின்றேன். அவர் தொடர்பில் என்னிடத்தில் மதிப்பிருக்கின்றது. அந்த மதிப்பு இருப்பது இராணுவ அதிகாரிகளால் அதிகாரிகளுக்கு இருக்கும் மதிப்பு மாத்திரமேயாகும். அதற்கு அப்பால் இந்த அரசியலில் நான் ஒரு போதும் அவரை மதிக்கப் போவதில்லை. காரணம் அவரைச் சுற்றியிருப்பது மீண்டும் அந்த திருட்டுக் கும்பலேயாகும்.

 2019 நவம்பர் 17ம் திகதி  ஒரு வேளை கோட்டாபய இந்நாட்டின் ஜனாதிபதியானால் நீங்கள் மீண்டும் டுபாய் போய்விடுவீர்களா?

 நான் இலங்கையிலேயே இருப்பேன். அன்று செய்தவற்றை அவர்களால் இப்போது செய்ய முடியாது. அவ்வாறு செய்யுமளவுக்கு அவர் முட்டாள் அல்ல என்றே நான் நினைக்கின்றேன். அன்றிருந்தவர் அல்ல இன்றிருப்பது. மற்றது கடந்த ஐந்து வருடங்களில் எமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இந்நாட்டில் மனித உரிமைகள் இருக்கின்றன. இந்நாட்டில் சுயாதீன நீதிமன்ற கட்டமைப்புள்ளது. அந்தக் காலத்தில் இவைகள் எதுவும் இருக்கவில்லை. அவை அவர்களது கைகளிலேயே இருந்தது. அதனால்தான் பிரச்சினை ஏற்பட்டது.

அதாவது கோட்டாபய பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில், மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சுயாதீன நீதிமன்றம், சுயாதீன பொலிஸ் போன்ற எதுவும் இருக்கவில்லை என்றா கூறுகின்றீர்கள்?

ஆம். அவற்றை அழித்து சேதமாக்கினார்கள் என்றே நான் கூறுகின்றேன். அப்படி இல்லை என்றால் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிட்டார் என்பதற்காக அவரை சிறையில் அடைத்திருக்க மாட்டார்கள்தானே. அந்தக் காலத்தில் மக்கள் மிகவும் அச்சத்துடனேயே வாழ்ந்தார்கள். வெள்ளை வேன்களில் கடத்திச் செல்லப்பட்டமை, ஊடகவியலாளர்களை வீதியில் படுகொலை செய்தமை, தாக்கப்பட்டமை போன்ற பல விடயங்கள் அந்தக் காலத்தில்தானே இடம்பெற்றது.

கொழும்பு பித்தளை சந்தியில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலின் பின்னர், கோத்தாவின் ஆடையில் இரத்தம் படிந்திருந்தது. அது அவருடைய இரத்தம் தானா? அப்படியாயின் அதற்கான காயங்களை காட்டுமாறும் மகேஸ் சேனாநாயக்க கேட்டுள்ளார். (நன்றி SL VLOG )

Last modified on Wednesday, 30 October 2019 03:02
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd