ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, நேற்று ஆரம்பமானது. அதன் தொடர்ச்சியாக இன்றும் (01) இடம்பெறவுள்ளது.
இதேவேளை, தபால்மூல வாக்களிப்பின் போது பாதுகாப்பு கடமையில் இருக்கும் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், தங்களுடைய தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்வதற்கு, எதிர்வரும் 4 மற்றும் 5 ஆம் திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தபால்மூல வாக்களிப்பின் போது, வாக்குச்சீட்டை படமெடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளதாக தனக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இவ்வாறு, புகைப்படம் எடுத்து பேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்களுக்கு ஆகக் குறைந்த தண்டனையாக, 3 வருடங்கள் சிறைத்தண்டனையை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலையில் இருந்து நுவரெலியா வலயக்கல்வி காரியாலயத்திற்கு தபால்மூல வாக்களிப்பிற்காக, ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்றின் மீது லிந்துலை பகுதியில் வைத்து இனம் தெரியாதோரால் நேற்று (31) கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.