ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைகள் அதிகரித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறான 32 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 153 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வன்முறைகளினால் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 12 சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், நேற்றைய தினம் தாக்குதல் சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
பத்தேகம பகுதியில் கட்சியொன்றின் அலுவலகமொன்று சேதமாக்கப்பட்டுள்ளதாக பெப்ரல்அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 21 முறைப்பாடுகள் தமது அமைப்பிற்கு கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல் கண்காணிப்பகத்தின் தேசிய அமைப்பாளர், சட்டத்தரணி ரசங்க ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.
தமது அமைப்பிற்கு மொத்தமாக 451 முறைப்பாடுகள் இதுவரை கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
இவற்றில் சட்டவிரோத பிரசார நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் 240 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.