அரசியல் கட்சியொன்றின் பிரசாரக் கூட்டத்துக்கு சென்றுதிருப்பிய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸை வழிமறித்த இனந்தெரியாக குழுவொன்று, அந்த பஸ்ஸில் இருந்தவர்களை கீழிறக்கி, அவர்கள் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
வீதியின் குறுக்கே, பாரிய மரக்கட்டைகள் போடப்பட்டிருந்தன. இதனால், அந்த பஸ் அவ்விடத்திலேயே நிறுத்தப்பட்டது. அப்போது மறைந்திருந்தவர்கள், பஸ்ஸில் இருந்தவர்களை கீழிறக்கி அவர்கள் மீது கடுமையான தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம், நவகத்தேகம கருவலகஸ்வெவ குடா மெதவச்சி பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது.
சுமார் 20 பேரடங்கிய குழுவினரே, இவ்வாறு துரத்தித் துரத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில், கடுமையான காயங்களுக்கு உள்ளான நால்வர், புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தினால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும் சேதமடைந்துள்ளது.
அதன்பின்னர், சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி, புத்தளம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ஒருபிரிவினர் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அவ்விடத்துக்கு விரைந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவான எம்.பியான பிரியங்கர ஜயரத்ன, பெரமுனவுக்கு ஆதரவானவர்கள், இரு தரப்பினரையும் சமாதானம் படுத்துவதற்கு முயன்றுள்ளனர்.