web log free
May 05, 2024

“பேட்” விவகாரம் சூடுபிடிப்பு

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் ஆரோக்கிய துவாய் (பேட்) விவகாரம், இலங்கை ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் சூடுபிடித்துள்ளது. 

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, தான் ஜனாதிபதி ஆனால், ஆரோக்கிய துவாய் (பேட்) இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று அறிவித்துள்ளார்.

இதற்கு, “PAD MAN” என்று சஜித் பிரேமதாஸவை கிண்டல் செய்கின்றனர். இந்நிலையில், 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அணியினரும் கழுவிக், கழுவி ஊத்திக்கொண்டிருக்கின்றனர். 

பேஸ்புக் மற்றும் டுவிற்றர் இணைய தளங்களில், பல்வேறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. ஆதரவான கருத்துகளும், எதிரான கருத்துகளும் பரப்பப்படுகின்றன.

இந்நிலையில், இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திரமும், ஐ.சி.சியின் மூத்த போட்டி  தீா்மானிப்பாளராகவும் பணியாற்றும் ரொஷான் மகாநாம தனது பேஸ் புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

இலங்கை சனத்தொகையில் 62 வீதமாக இருக்கும் பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களை வேறாகப் பார்த்தலுக்கு எதிராக சமூக ஊடகம் மற்றும் ஊடகங்களுக்கு அப்பால் சென்ற செயற்பாடுகள் அவசியம் என்றும், சுகாதாரம், ஆரோக்கியம், கல்வி மற்றும் தொழில் சந்தர்ப்பங்களுக்காகவும் அவர்களுக்கு சமத்துவம் வழங்குவது நாட்டுப் பிரஜைகளான எமது பொறுப்பாகும்.

பெண்களினது, பெண் பிள்ளைகளினது ஆரோக்கியத் தேவைகள் மற்றும் அவற்றுக்குத் தேவையானவைகளை அவர்களால் பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தினால் அன்றாடம் கல்வி நடவடிக்கைகள் மற்றும் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத பெண்கள் இன்றும் வாழும் நாட்டில் நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் பெண்களின் ஆரோக்கிய தலைப்புக்கு அப்பால் சென்ற ஒன்றாக ஆகியிருக்க வேண்டியது என்றாலும் சிலர் இதற்கு எதிராகத் தாக்குதல் மேற்கொண்டிருப்பதைக் காணக் கூடியதாக உள்ளதாகவும் ரொஷான் மகாநாம குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்தினுள் இவ்வாறான விடயங்களைப் பேசுவத்கு உள்ள தயக்கத்தினால் இவை மறைக்கப்பட்டுப் போன பிரச்சினையாகியுள்ளது. புதிய உலகில் வாழும் மக்களாக இந்த குறுகிய எல்லையிலிருந்து விலகி பெண்களது இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சமூக கருத்துக்களை உருவாக்க வேண்டும்.

மூன்று பெண்பிள்ளைகளின் தந்தை என்ற வகையில் தனக்கு அவர்களது தேவைகள் தொடர்பில் புரிந்துணர்வு உள்ளது என்றும், எனவே ஒட்டு மொத்த பெண்களுக்காக குரல் கொடுப்பதற்கு தான் பின்நிற்கப்போவதில்லை என்றும் அவர் அந்தக் குறிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.