ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு பஸ் வண்டியில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த யுவதியை அவளோடு இருந்த சில இளைஞர்கள் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் ஹெம்மாதகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட யுவதியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்தே இவ்விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
தனது மனைவியுடன் மொட்டுக் கட்சியின் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்ற தனது மகள் இரவு 11 மணியாகியும் வீடு திரும்பவில்லை என அந்த யுவதியின் தந்தை முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த யுவதியும், அவளது தாயும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மேற்கொண்ட விசாரணைகளின் போது கூட்டம் நிறைவடைந்து பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது பஸ்ஸிலிருந்த இளைஞர் ஒருவர் குறித்த யுவதியை பஸ்ஸைவிட்டு இறக்கி ஹெம்மாதகம, எல்பிட்டி, பலவத்கம காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளது பொலிஸாருக்குத் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபரான இளைஞரும், அவரது நண்பர்களும் அங்கு வைத்து குறித்த யுவதியை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய ஹெம்மாதகம பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவத்தனர்