இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக, கோத்தாபய ராஜபக்ஷ, இன்று (18) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
அனுராதபுரம் ருவன்வெலிசாய மகாபோதி முன்றலில் இந்த பதவிப்பிரமாணம், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ,ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர் செனவிரத்ன ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றது.
இங்கு உரையாற்றிய அவர் கூறியதாவது ,
இந்த தேர்தலின் சிங்கள பெரும்பான்மை மக்கள் மூலம் வெற்றி பெற முடியும் என்று நினைத்தேன்.தமிழ் சிங்கள தலைவர்களிடம் நான் விடுத்த வேண்டுகோள்களுக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை.என்றாலும் நாம் இனி ஒன்றுபட்டு செயற்படுவோம்.
எனக்கு வாக்களித்த வாக்களிக்காத அனைவரும் இனிமேல் ஒன்றாக இணைந்து செயற்படுவோம்.பௌத்த சிந்தனைகளின்படி அனைவரும் சமமாக மதிக்கக் கூடிய ஒரு சூழலை உருவாக்குவேன்.அனைத்து இலங்கையர்களும் தமது மத இன கொள்கைகளை முன்னெடுக்கும் ஒரு நிலையை உருவாக்குவேன்.
நாட்டை கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்.நாட்டின் இறைமை ஐக்கியம் பாதுகாப்பு என்பனவற்றை உறுதிப்படுத்தி சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம்.தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எனது நோக்கம்.
பாதாள உலகம்,சிறுவர் – பெண்கள் பாதுகாப்பு ,அனைத்து நாடுகளுடன் சிறந்த உறவை பேணுதல் எமது நோக்கம்.எமது நாட்டின் பாதுகாப்பு இறைமை ஆகியவற்றை கருத்திற்கொண்டு உள்விவகாரங்களில் தலையிடாதவாறு செயற்படுமாறு நான் உலக நாடுகளை நட்புடன் கேட்கிறேன்.
புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட வேண்டும்.சிறந்த அரச சேவை உருவாக்கப்பட வேண்டும்.மக்களின் ஆணையை நான் நிறைவேற்றும் வகையில் எனது அரசை அமைப்பேன்.
நான் எனது நாட்டின் மீது அன்பும் பற்றும் வைத்துள்ளேன்.அதில் நீங்களும் இணைந்து நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல வருமாறு அழைப்பு விடுக்கிறேன்.தமிழ் முஸ்லிம் மக்கள் எனது இந்த பயணத்தில் என்னுடன் செல்ல முன்வருமாறு அழைப்பு விடுக்கிறேன் என்றார்.
இந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ,எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச மற்றும் பல வெளிநாட்டு இராஜதந்திரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.