web log free
November 28, 2024

நன்றி நவில்ந்தார் சம்பந்தன்

2019-11-16 ஆம் நாள் நடைபெற்ற இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தல் பெரும்பாலும் அமைதியாக நிறைவடைந்துள்ளது.

திரு.கோத்தபாய இராஜபக்ச குடியரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தலை மிக நேர்த்தியாக நடாத்த துணைநின்ற தேர்தல் ஆணையாளர் மற்றும் அவரது பணிமனை ஊழியர்கள், பாதுகாப்பு தரப்பினர், அனைத்து அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள அனைத்து நிருவாக மாவட்டங்களிலும் தேர்தல் மாவட்டங்களிலும் வாழும் மக்கள், நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள தேசியப் பிரச்சனைக்கு தீர்வு காணக் கூடிய வகையில் முன்னோடியான செய்தியைத் தனது தேர்தல் அறிக்கை வாயிலாக வெளிப்படுத்திய கருத்துகளின் அடிப்படையில் திரு. சஜித் பிரேமதாச அவர்களுக்கு பெருவாரியாக வாக்களித்துள்ளனர் .

எமது கட்சியாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடாத, பிரிக்கமுடியாத இலங்கை நாட்டினுள் அதியுச்ச அதிகாரப் பகிர்வு வழங்கப்படுமென்ற அடிப்படையில் தமிழ் மக்களை ஒருமித்துத் திரு சஜித் பிரேமதாச அவர்களது சின்னமான அன்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டிருந்தது.

அதியுச்ச அதிகாரப் பகிர்வு தேசியப் பிரச்சனைக்கு தீர்வாக வழங்கப்பட வேண்டுமென்ற கருத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் தலைவர்களும் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

தேர்தல் புறக்கணிப்பு, தமிழ் வேட்பாளருக்கு வாக்களிப்புப் போன்ற பல்வேறு திசை திருப்பல்கள் காணப்பட்ட சூழலில், அவற்றுக்குச் செவிசாய்க்காது, எமது வேண்டுகோளுக்கமைய ஒற்றுமையாக அன்னத்துக்கு வாக்களித்து, இலங்கை ஆட்சியாளருக்கும் பன்னாட்டுச் சமூகத்திற்கும் தமிழ் மக்கள் ஓர் உறுதியான செய்தியைக் கூறி இருக்கின்றனர் .

அதாவது தமது உரிமை தொடர்பான வேட்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் தாம் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இந்த மக்களுக்குத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வாக்களிப்பில் காட்டிய ஒற்றுமை தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என விரும்புகின்றேன். இலங்கையில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலை விட இத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாக்களிப்பு வீதம் உயர்ந்துள்ளமை கருத்தில் கொள்ளப்படவேண்டிய விடயமாகும்.

திருகோணமலையில் 83% வீதமும், அம்பாறையில் 80% வீதமும், மட்டக்களப்பில் 77% வீதமும், வன்னியில் 73% வீதமும், யாழ்ப்பாணத்தில் 66.5% வீதமுமாக மக்கள் வாக்களித்திருப்பது நிறைவளிக்கின்றது. புதிய குடியரசுத் தலைவர், தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டுமென விரும்புகின்றேன். அவர் , அவ்வாறு செயற்படுவார் என நம்புகின்றேன்.

அவ்வாறு செயற்படுவதன் மூலம், நாம் அனைவரும் இலங்கை நாட்டின் சமமான குடிமக்கள் என்னும் உணர்வு ஏற்படும் என்பதையும் நாடு பிளவுபடாது பாதுகாக்கப்படும் என்பதையும் அதன் மூலம் நாடும் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் பாரிய முன்னேற்றத்தையும் அபிவிருத்தியையும் அடைவர் என்பதையும் புதிய குடியரசுத் தலைவருக்கும் அவர் சார்ந்தோருக்கும் தமிழ்மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

எமது வேண்டுகோளுக்கமைய ஒற்றுமையாய் அன்னத்துக்கு வாக்களித்த அனைத்துத் தமிழ் மக்களுக்கும் மீண்டுமொருமுறை நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

Last modified on Tuesday, 19 November 2019 16:42
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd