web log free
May 11, 2025

ஜெய்சங்கரே இந்தியாவின் ஒரே துருப்புச் சீட்டு

புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

அவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின், அழைப்பிதழுடன் வந்துள்ளார். ஆகையால், புதிய ஜனாதிபதி கோத்தாவின் முதலாவது வெளிநாட்டு விஜயம் இந்தியாவாகதான் இருக்கமுடியும் என நன்றாகவே யூகிக்க முடியும்.

இந்நிலையில், இந்தியா - இலங்கை உறவு ஆகியவை குறித்து ஃப்ரண்ட்லைன் இதழின் அசோசியேட் எடிட்டரும் மூத்த பத்திரிகையாளருமான ஆர்.கே. ராதாகிருஷ்ணன், கீழ் கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரை தமிழர் பிரச்சனை என்பது ஒரு வியூக ரீதியான பிரச்சனை. உண்மையிலேயே அந்தப் பிரச்சனையில் ஏதும் அவர்கள் செய்யவில்லை.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி முன்வைத்த 13ஆவது திருத்தச் சட்டத்தைத் தவிர, தில்லியிலிருந்து தமிழர்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இலங்கையில் இருந்த ஆயுதக் குழுக்களுக்கு இந்தியா ஆயுதம் வழங்கியது தமிழர் மீதான அக்கறையில் அல்ல.

அவர்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தத்தான். தற்போதைய சூழலை பொறுத்தவரை, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்தான் ஒரே துருப்புச் சீட்டு.

அவருக்கு பல நாடுகளில் எதிர்மறையான பிம்பம் இருந்தால்கூட, இலங்கையில் நல்ல பெயர் இருக்கிறது. அவர் அங்கே முதல் நிலை செயலராக இருந்தபோதும் தூதராக இருந்தபோதும் நல்ல உறவை ஏற்படுத்தியிருக்கிறார். இனியும் நல்ல தூதரக அதிகாரிகளை நியமித்து உறவை நாம் மேம்படுத்த வேண்டும்.

இல்லாவிட்டால் தென்னிந்தியாவில் புதிய இராணுவக் கட்டமைப்பை இந்தியா உருவாக்க வேண்டிய தேவை ஏற்படும் என்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd