web log free
March 12, 2026

ஒருவரை “காற்று” கொன்றுவிட்டது

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கறுவாக்கேணி, சுங்கான்கேணி பகுதியில் இன்று (22) அதிகாலை வீசிய சுழல் காற்றினால் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

கறுவாக்கேணி, சுங்கான்கேணி பகுதியில் வீசிய சுழல் காற்றினால் கறுவாக்கேணியில் அமைந்துள்ள தனியார் ஒருவரின் கடைத் தொகுதியை பராமரிக்கும் பாடசாலை வீதி சுங்கான்கேணியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ஆறுமுகம் (வயது 62) என்பரே உயிரிழந்துள்ளார்.

கடைத் தொகுதியை பராமரிக்கும் குறித்த நபருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது வீசிய சுழல் காற்றினால் வீட்டின் கூரை வேறொரு இடத்தில் வீசப்பட்ட போது வீட்டின் சுவர் பகுதி உயிரிழந்தவரின் தலையில் விழுந்தமையால் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் மட்டக்களப்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரின் விசாரணையின் பின்னர் இன்று மாலை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd