இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் இந்திய விஜயத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ கைது செய்யப்பட்டார்.
இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ 2 நாட்கள் விஜயம் மேற்கொண்டு இன்று (28) இந்தியா செல்லவுள்ள நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மதிமுக பொதுச்செயலாளரும் எம்பியுமான வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பொறுப்பேற்றபோது, அவருக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர் மோடி, இந்தியா வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.
மேலும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரும் இலங்கை சென்று ஜனாதிபதியை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவுக்கு வருகை தர முறைப்படி இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார் ஜெய்சங்கர்.
இதனை ஏற்று தாம் இந்தியா வருவதாக இலங்கை ஜனாதிபதி அறிவித்தார். ஆனால் அவரின் இந்திய வருகைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.