ஐக்கிய தேசியக் கட்சியை மீளவும் செயற்பாட்டு அரசியலுக்கு கொண்டுவருவதற்காக, “கோத்தா ஜனாதிபதி- சஜித் பிரதமர்” எனும் தொனிப்பொருளில், செயற்பாட்டு அரசியலை முன்னெடுப்பதற்கு, சஜித் பிரேமதாஸ தலைமையிலான குழுவினர் முன்னெடுக்கவுள்ளனர்.
ஜனாதிபதி பதவி, எதிரணியிடம் இருப்பதனால், இன்னும் 5 வருடங்களுக்கு அரச அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு காத்திருக்கவேண்டும். எனினும், குறுகிய காலத்துக்குள் மீளவும் எழும்ப வேண்டுமாயின், “கோத்தா ஜனாதிபதி- சஜித் பிரதமர்” எனும் தொனிப்பொருளை முன்னெடுக்க வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஆகையால், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்கவேண்டாம் என்றும். கோத்தாவுடன் முரண்படாமல், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையை கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்குமாறும், அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.
ஜனாதிபதி கோத்தாபயவின் கீழ், சஜித் பிரேமதாஸவை பிரதமராக்கமுடியும் என்ற எண்ணத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் கொண்டுசெல்லமுடியும் என்றும் சஜித் அணியினர் அவதானம் செலுத்தியுள்ளனர்.
ஆகையால், எதிர்க்கட்சித் தலைவர் பதவி, ஐக்கிய தேசியக் கட்சி தலைமைத்துவ பதவி உள்ளிட்டவை தொடர்பிலான முரண்பாடுகளை விரைவில் நிறைவுக்கு கொண்டுவருவதற்கும் சஜித் அணியினர் தீர்மானித்துள்ளனர் என்றும் அறியமுடிகின்றது,